லண்டன் : டென்னிஸ் உலகில் மிகவும் பாரம்பரியமிக்க விம்பிள்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை செக் குடியரசு வீராங்கனை மார்கெட்டா வொண்டர்சோவா கைப்பற்றி இருக்கிறார்.
24 வயதான இவர் தரவரிசையில் 42 வது இடத்தில் இருந்த நிலையில் விம்பிள்டன் இறுதிச் சற்று வரை முன்னேறினார். ஆறு மாதம் காலமாக காயத்தால் அவதிப்பட்டு தற்போது டென்னிஸ் களத்திற்கு திரும்பிய அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார்.

பரபரப்பான இறுதிப் போட்டியில் துனிசியா வீராங்கனை ஜாபேரை 6க்கு 4 6க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வொண்டர்சோவா வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் சாம்பியன் பட்டத்துடன் இந்திய ரூபாய் மதிப்பில் 25 கோடியே 25 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. இது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழங்கப்பட்ட பரிசு தொகையை விட அதிகமாகும்.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த பணத்தைவிட இது கூடுதலாகும். கிராண்ட்ஸ்லாம் பொருத்தவரை ஆண்கள் பிரிவில் Best of 5 செட்கள் விளையாடுவார்கள். ஆனால் மகளிர் பொருத்தவரை Best of 3 செட் தான் விளையாடுவார்கள். எனினும் பாலின பாகுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக இருவர்களுக்கும் ஒரே அளவிலான பரிசு தொகை தான் வழங்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் தோல்வியை தழுவிய துனிசியா வீராங்கனை ஜாபேர் கண்ணீர் தளும்ப பேசினார். தற்போது அவர் மூன்று மிகப்பெரிய கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் இறுதி சுற்று வரை சென்று தோல்வியை தழுவி இருக்கிறார். எனினும் இந்த தோல்வியால் துவண்டு போக மாட்டேன்.நான் மீண்டும் முயற்சி செய்வேன் என்று ஜாபேர் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய மார்கெட்டா தமது எட்டு ஆண்டு கால காதல் வாழ்க்கையில் தனது கணவர் அழுது ஒரே ஒரு முறை தான் பார்த்திருக்கிறேன். அதுவும் திருமணம் அன்று அழுதார். தற்போது நான் வெற்றி பெற்றதை அடுத்து இப்போது அழுது கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.