11 மணி நேரம் நடந்த விம்பிள்டன் மராத்தான் டென்னிஸ்-புதிய வரலாறு படைத்த வீரர்கள்

இரு வீரர்களும் சளைக்காமல் இறுதி வரைப் போராடினர். இறுதியில், அமெரிக்க வீரர் இஸ்னரின் கை ஓங்கியது. 3 நாட்களாக விளையாடி வந்த 5வது செட்டை 70-68 என்ற கேம் கணக்கில் கைப்பற்றி போட்டியையும் வென்று ஒரு வழியாக ஓய்ந்தார்.
அமெரிக்காவின் இஸ்னருக்கும், பிரான்சின் மஹூத்துக்கும் இடையிலான இந்த ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டி புதிய வரலாறையும், பல புதிய சாதனைகளையும் படைத்து விட்டது.
இதுவரை இப்படி ஒரு போட்டி நடந்ததில்லை, இனியும் நடக்க வாய்ப்பில்லை என்று கூறும் அளவுக்கு இப்போட்டி அமைந்து விட்டது. இந்தப் போட்டியின் போது பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. சர்வீஸ் பிரேக், ஏஸ்கள் என சகலத்திலும் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமைன்று இந்தப் போட்டி தொடங்கியது. இரு வீரர்களும் தலா 2 செட்களை வென்று சம நிலையை எட்டினர். இதையடுத்து 5வது செட்டுக்கு விடப்பட்டது. அந்த ஆட்டம்தான் நேற்று வரை நீடித்து அனைவரையும் அயர வைத்து விட்டது.
இருவரும் சரமாரியாக கேம்களைக் கைப்பற்றிக் கொண்டு போனதால் போட்டியும் இழுபறியாகி வந்தது. இந்த நிலையில் நேற்று 3வது நாளாக ஆட்டம் தொடர்ந்தது.
புதன்கிழமை வரை 10 மணி நேரம் ஆடியிருந்த நிலையில் நேற்றுஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே முடிவு தெரிந்து அனைவருக்கும் நிம்மதிப் பெருமூச்சைக் கொடுத்தது.
இஸ்னர் 70 கேம்களையும், மஹூத் 68 கேம்களையும் கைப்பற்றினர். இதையடுத்து 5வது செட்டை வென்றார் இஸ்னார். போட்டியையும், 6-4, 3-6, 6-7, 7-6, 70-68 என்ற கணக்கில் வென்றார் இஸ்னர்.
போட்டி முடிந்தபோது சரியாக 11 மணி நேரம் 5 நிமிடங்கள் ஆகியிருந்தது.
இதற்கு முன்பு 2004 பிரெஞ்சு ஓபன் போட்டியின்போது பிரான்ஸ் வீரர்கள் பேப்ரிஸ் சான்டோரா மற்றும் அர்னாட் கிளெமன்ட் ஆகியோர் ஆறு மணி நேரம் 33 நிமிடங்கள் ஆடி 6-4, 6-3, 6-7, 3-6, 16-14 என்ற செட் கணக்கில் ஆட்டத்தை முடித்தனர். அதுதான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இப்போது இஸ்னர்,மஹூத் ஜோடி உடைத்து விட்டது.
சாதனைப் போட்டியின் புள்ளிவிவரங்கள்
- 5வது செட் போட்டி நடந்த நேர அளவு 8 மணி 11 நிமிடங்கள்.
- மொத்தம் விளையாடப்பட்ட கேம்களின் எண்ணிக்கை 183
- 5வது செட்டில் விளையாடப்பட்ட கேம்களின் எண்ணிக்கை 138
- மொத்த கேம்களின்போது கிடைத்த சர்வீஸ் பிரேக் 3
- இருவரும் சேர்ந்து விளாசிய ஏஸ்களின் எண்ணிக்கை 215
- இஸ்னர் போட்ட ஏஸ்களின் எண்ணிக்கை 112
- நிக்லோஸ் மஹூத் போட்ட ஏஸ்கள் 103
- கேம்களின் அடிப்படையில் பார்த்தால் இதுதான் ஒற்றையர் போட்டியில் நீண்ட நேரம் நடந்த போட்டியாகும்.
- ஒரு கிரான்ட்ஸ்லாம் போட்டியில் நீண்ட நேரம் நடந்த ஒற்றையர் பிரிவு செட் இதுதான்.
- ஒரு போட்டியில் ஒரு வீரர் அதிகளவில் ஏஸ்கள் வீசியதும் இதுவே முதல் முறை.
- ஒரு போட்டியில் அதிக அளவிலான ஏஸ்கள் வீசப்பட்டதும் இதுவே முதல் முறை.
- இந்தப் போட்டியில் மொத்தம் எடுக்கப்பட்ட புள்ளிகளின் எண்ணிக்கை 980
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications