பேட்மிண்டன் தொடருக்கு நிதி தராத அரசு.. ரசிகரின் விமர்சனத்துக்கு பிவி சிந்து பதிலடி
மும்பை: வெளிநாட்டு பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்க மத்திய அரசின் விளையாட்டு துறை நிதி வழங்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் ஜெர்மனியில் நடைபெற்ற பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்து மற்றும் லக்சயா சென் ஆகியோர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
பொதுவாக இது போன்ற வெளிநாட்டு தொடரில் பங்கேற்க இந்தியா சார்பில் பேட்மிண்டன் வீராங்கனைகள் சென்றால் மத்திய அரசின் விளையாட்டு துறை தான் நிதி வழங்கும். ஆனால் இம்முறை இன்று நிதி ஒதுக்கிடும் செய்யப்படவில்லை.

இதற்கு நிர்வாக சிக்கல்தான் காரணம் என்று முதலில் கூறப்பட்டது. எனினும் பிவி சிந்து தனது சொந்த பணத்தை பயன்படுத்தி ஜெர்மனிக்கு சென்று சாம்பியன் பட்டத்தை வென்று வந்திருக்கிறார். ஆசிய போட்டியில் பேட்மிண்டன் தனிநபர் பிரிவில் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஒரு பதக்கத்தை கூட வெல்லாமல் திரும்பி வந்ததே மத்திய அரசு பேட்மிண்டன் விளையாட்டுக்கு நிதியை நிறுத்தியதாக செய்திகள் வெளியானது.
இதனை சுட்டிக்காட்டி ரசிகர் ஒருவர் பிவி சிந்து போன்ற நட்சத்திர வீராங்கனைகள் தங்களுடைய சொந்த பணத்தில் வெளிநாட்டு தொடருக்கு செல்ல வேண்டும் என்றும் அரசு பணத்தை எதிர்பார்க்கக் கூடாது என்றும் பதிவிட்டு இருந்தார். அதற்கு பிவி சிந்து காட்டமாக பதில் அளித்து இருக்கிறார்.தொழில்முறை பேட்மிண்டன் விளையாட்டின் உண்மையான நிலையை உங்களுடைய பதிவு முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்று பிவி சிந்து சுட்டிக்காட்டியுள்ளார்.
டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் விளையாட்டுகளுக்கிடையேயான பரிசுத் தொகை இடைவெளி மிகவும் அதிகமாக உள்ளது. உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டனின் முதல் சுற்றிலேயே வெளியேறும் ஒரு வீரருக்கு 80,000 பவுண்டுகள் பரிசாகக் கிடைக்கிறது. ஆனால், பேட்மிண்டன் விளையாட்டின் மிக முக்கியமான மற்றும் அதிக நிதி கொண்ட தொடர்களில் ஒன்றான சீனா ஓபனில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கே 1,40,000 டாலர்கள் மட்டுமே கிடைக்கிறது. அதே தொடரின் முதல் சுற்றில் வெளியேறினால் வெறும் 2,000 டாலர்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.
பரிசுத் தொகையில் இவ்வளவு பெரிய வித்தியாசம் இருந்தபோதிலும், இரு விளையாட்டுகளிலுமே வீரர்களுக்கான செலவுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. பயணம், பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், உடற்பயிற்சியாளர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் எனப் பல்வேறு தரப்பிற்குச் செலவிட வேண்டியுள்ளது. இந்த நிதி வேறுபாடு குறித்து ரோஹன் போபண்ணாவுடன் விரிவாக விவாதித்துள்ளதாகவும் பிவி சிந்து குறிப்பிட்டுள்ளார்.
முன்னணி வீரர்கள் நிதி ரீதியாகச் சுயமாகச் செயல்பட முயல்வது அவசியமானது. சில வீரர்களுக்கு நல்ல வசதி அமைவது சாத்தியமாக இருந்தாலும், அனைத்து வீரர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால்தான் 'ஓஜிடி இந்தியா' போன்ற அமைப்புகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைகிறது.
பத்திரிகையாளர் மிஹிரின் கட்டுரையை மேற்கோள்காட்டிய சிந்து, பல இளம் பேட்மிண்டன் வீரர்கள் பயிற்சியாளர்கள் இன்றியே தொடர்களில் பங்கேற்கும் சூழல் நிலவுவதாகவும், நிதி நெருக்கடியால் சிலர் தொடர்களிலிருந்தே விலக நேரிடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அனுபவமிக்க வீரர்கள் தங்கள் பயணங்களுக்கான நிதியைத் திரட்டிக்கொள்ள முடியும். ஆனால், அடுத்த சிந்துவாகவோ அல்லது லக்ஷ்யா சென்னாகவோ உருவெடுக்க வேண்டும் என்ற கனவோடு களமிறங்கும் 18 வயது இளம் வீரர்களின் நிலை என்ன என்ற சிந்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அரசும், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் பல ஆண்டுகளாக விளையாட்டு வீரர்களுக்கு வழங்கி வரும் மகத்தான ஆதரவை மறுக்க முடியாது. இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.விளையாட்டு நிர்வாகத்தில் பொறுப்புடைமை என்பது மிகவும் அவசியமானது. அதேவேளையில், விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு அளிப்பது அமைப்பின் நிதியை வீணடிக்கும் செயல் அல்ல. மாறாக, அது இந்தியாவின் விளையாட்டு எதிர்காலத்திற்கான முதலீடாகும் என்று பிவி சிந்து கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications


