ரியோ: ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் பி.வி. சிந்து வெற்றி பெற்றார்.
பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் 31-வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான சீன வீராங்கனை வாங் யுஹானை எதிர்கொண்ட பி.வி.சிந்து, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடந்த அரையிறுதி அரையிறுதி போட்டியில் தரவரிசையில் 10-ம் இடத்தில் உள்ள பி.வி.சிந்து, 6-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோசோமி ஓகுராவை எதிர் கொண்டார். ரசிகர்களின் கரகோஷங்களுக்கிடையே கடும் சவாலை எதிர்கொண்ட சிந்து முதல் செட்டை 21-19 என கைப்பற்றினார்.
அடுத்த செட்டில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய சிந்து, மிக எளிதாக ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி 21-10 என கைப்பற்றினார். இதனால் ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கம் கிடைப்பது உறிதியாகியுள்ளது.