டெல்லி: இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தனது சாதனை மகுடத்தில் மேலும் ஒரு வைரத்தை சேர்த்து கொண்டார். 75 கிகி பிரிவில் உலகின் நம்பர்-1 வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்த விஜேந்தர் சிங்கின் சாதனைகள் தொடர்கிறது. ஹரியானா மாநிலம் பிவானியை சேர்ந்த 23 வயதான இளம் விஜேந்தர் இந்த மாத துவக்கத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்றார்.
இந்நிலையில் சர்வதேச குத்துச்சண்டை சங்கம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் 75 கிகி மிடில் வெயிட் பிரிவில் விஜேந்தர் 2700 புள்ளிகள் பெற்று நம்பர்-1 வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முதலிடத்தில் இருந்த உஸ்பெகிஸ்தான் வீரர் அப்போஸ் அடோவ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் 2100 புள்ளிகள் பெற்றுள்ளார்.
இரண்டாவது இடத்தில் 2500 புள்ளிகளுடன் கியூபா வீரர் எமிலியோ கோரியா பாயக்ஸ் இருக்கிறார்.
முதலிடம் பிடித்தது குறித்து விஜேந்தர் கூறுகையில், இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உற்சாகம் எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட உதவும் என்றார்.