ஆயிரத்தில் ஒருவனாக மாறி சாதனை படைத்த மேக்ஸ்வெல்
இந்தூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் 1000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல் இடம்பிடித்தார்.
10வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தூரில் நேற்று நடைபெற்ற 8-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 14.3 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.
அதிரடியாக ஆடிய ஆம்லா, 38 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 58 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் கேப்டன் மேக்ஸ்வெல் 22 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி 43 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்தப் போட்டியில் 1000 ரன்களை கடந்தும் மேக்ஸ்வெல் சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை 45 போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் 1005 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார் மேக்ஸ்வெல்.


Click it and Unblock the Notifications