மும்பை: சச்சின் டெண்டுல்கர், 1989-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்டில் அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்தப் போட்டியில் சச்சினின் அறிமுகம் நடந்தது ஒருபுறம் இருக்க, அப்போதைய இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்திற்கும் பாகிஸ்தான் ரசிகர் ஒருவருக்கும் இடையே மைதானத்திலேயே சண்டையும் நடந்தது.
அந்த மோதலில் ஸ்ரீகாந்தின் சட்டை பட்டன்கள் கிழித்து எறியப்பட்டது என்றும், மற்ற வீரர்கள் தலையிட்டு அந்த ரசிகரை விலக்கி விட்டார்கள் என்றும் அந்தப் போட்டியில் விளையாடிய முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தற்போது நினைவுகூர்ந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து 'தூர்தர்ஷனின்' "கிரேட் இந்தியன் கிரிக்கெட் ஷோ" நிகழ்ச்சியில் பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "கராச்சி போட்டியில் நான் மிட்-ஆஃப் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தேன். அப்போது திடீரென உள்ளூர் உடை அணிந்த நபர் ஒருவர், இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி மைதானத்திற்குள் நுழைந்தார். நாங்கள் சுதாரிப்பதற்குள், அவர் நேராக எங்கள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை நோக்கிப் பாய்ந்தார்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அதன்பிறகு நடந்தது ஒரு நம்பமுடியாத காட்சி. ஒரு டெஸ்ட் போட்டியின் நடுவே ஒரு பயங்கரமான கைகலப்பு ஏற்பட்டது. ஸ்ரீகாந்தும் பதிலுக்குத் தாக்க, அவரது சட்டையின் பட்டன்கள் கிழிந்தன. போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகள் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்" என்று அந்த அதிர்ச்சி நிமிடங்களை விவரித்தார்.
1989-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அரசியல் ரீதியாகத் தீவிரப் பதற்றம் நிலவியது. அந்தப் பின்னணியில்தான் இந்த கிரிக்கெட் தொடர் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோதலின் உச்சக்கட்டமாக, விக்கெட் கீப்பர் கிரண் மோரே செய்த செயலை மஞ்ச்ரேக்கர் வேடிக்கையுடன் குறிப்பிட்டார்.
"இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், தனது கேப்டனைக் காப்பாற்றுவதற்காக விக்கெட் கீப்பர் கிரண் மோரே ஓடிவந்து, தனது கால்களில் பேட்களை (Pad) அணிந்திருந்தபடியே அந்த ஊடுருவிய நபரை உதைக்கத் தொடங்கினார். அது ஒரு முழுமையான குழப்பமாக இருந்தது. கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஒரு தெருச்சண்டையைப் போலவே அந்தக் காட்சி இருந்தது" என்று மஞ்ச்ரேக்கர் கூறினார்.
இந்த சர்ச்சைக்கு நடுவே 1989 கராச்சி டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. 400-க்கும் அதிகமான கடினமான இலக்கை இந்திய அணி துரத்த முயன்றது. மஞ்ச்ரேக்கரின் அபார சதம் (113*), நவ்ஜோத் சித்துவின் 85 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 303 ரன்களை எட்டியபோது, இரு அணி கேப்டன்களும் போட்டியை டிரா செய்ய ஒப்புக்கொண்டனர்.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கானின் சதத்தால் (109) அந்த அணி 409 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் மனோஜ் பிரபாகர் 5 விக்கெட்டுகளையும், கபில் தேவ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.