கொச்சி: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்களை எடுத்தது.
இந்தியாவில் சுற்று பயணம் செய்து வருகிறது மேற்கிந்திய தீவுகள் அணி. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று கேரள மாநிலம் கொச்சியில் தொடங்கியது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

பேட்டிங் களமிறங்கிய அந்த அணிக்கு முதல் ஓவரே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரில் புவனேஷ்குமாரின் 2 பந்துகளை வீசினார். குமாரின் முதல் பந்தை எதிர்கொண்ட நிலையில் கெய்ல் ரன் அவுட் ஆனார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. 1 விக்கெட் இழப்புக்கு 1 ரன் என்ற நிலையில் மேற்கிந்திய தீவுகள் இருந்தது.

பின்னர் களமிறங்கிய சாமுவேல்ஸ், சார்ஸ்சுடன் இணைந்து நிலைத்து விளையாடினர். 10வது ஓவருக்குப் பின்னர் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்ந்தன. மிடில் ஆர்டர் வீரர்கள் நிலைத்து விளையாடினாலும் பின்வரிசை வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தனர். 48.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்களை எடுத்தது மேற்கிந்திய தீவுகள்.
இந்திய அணியின் ஜடேஜா, ரைனா தலா 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.