இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: மே. தீவுகள் முதலில் பேட்டிங்
கொச்சி: இந்தியா , மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் டோணி, தனது அணி முதலில் பீல்டிங் செய்யும் என்று தெரிவித்தார்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ஒருநாள், ஒரு டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறுகிறது. பந்தை எறிவதாக புகார் எழுந்ததால், நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் இந்த தொடரில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதும், அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கேல் காயம் காரணமாக ஓய்வெடுத்து வருவதும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரை, அஷ்வினுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், அமித் மிஷ்ரா, ஜடேஜா இருவரும் சுழற்பந்துவீச்சுக்கு பொறுப்பேற்க உள்ளனர். ரோகித் ஷர்மா காயமடைந்துள்ளதால், ஷிகர் தவானுடன் இணைந்து முரளி விஜய் அல்லது அஜிங்க்யா ரகானே தொடக்க வீரராகக் களமிறங்க உள்ளனர்.
கொச்சி நேரு ஸ்டேடியத்தில் பகல்-இரவு போட்டியாக நடைபெறும் முதல் ஒருநாள் போட்டிக்கான டாசில் இந்திய அணி வெற்றி பெற்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. மழை ஆபத்து இருப்பதால் இரண்டாவது பேட்டிங்கை தேர்வு செய்ததாக கேப்டன் டோணி தெரிவித்தார்.

வீறு கொள்வாரா விராட் கோஹ்லி?
சமீபத்திய தொடர்களில் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வரும் இளம் வீரர் விராத் கோஹ்லி, இந்த தொடரில் மீண்டும் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் உள்ளார். ரெய்னா, ராயுடு, டோணி, ஜடேஜா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளதால் ரன் குவிப்புக்கு பிரச்னை இல்லை.

சொந்த மண் பலம்
புவனேஷ்வர், மோகித், உமேஷ், ஷமி ஆகியோர் அடங்கிய வேகக் கூட்டணி, வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவதும், ரசிகர்களின் ஆதரவும் இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். இந்திய அணி ஆதிக்கத்தை தொடர ஆர்வமாக உள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி ஈடுகொடுத்து விளையாடி திறமையை நிரூபிக்க வரிந்துகட்டுகிறது.

மழைக்கு வாய்ப்பு
இரு அணிகளுமே வெற்றியுடன் தொடங்கும் உறுதியுடன் வரிந்துகட்டும் நிலையில், மழை விளையாடாமல் இருந்தால் விறுவிறுப்பான ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். ஏனெனில் புயல் காரணமாக கொச்சியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய அணி விவரம்
எம்.எஸ்.டோணி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், ரகானே, விராத் கோஹ்லி, அம்பாதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஷ்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, மோகித் ஷர்மா, உமேஷ் யாதவ், முரளி விஜய், குல்தீப் யாதவ்.

மேற்கிந்திய தீவுகள் அணி விவரம்
வேய்ன் பிராவோ (கேப்டன்), டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர், லியான் ஜான்சன், கெய்ரன் போலார்டு, தினேஷ் ராம்தின், ரவி ராம்பால், கெமார் ரோச், ஆந்த்ரே ரஸ்ஸல், டேரன் சம்மி, மார்லன் சாமுவேல்ஸ், லெண்டில் சிம்மன்ஸ், வேய்ன் ஸ்மித், ஜெரோம் டெய்லர்.


Click it and Unblock the Notifications