2027 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்.. இனி என்ன செய்யணும்?
மும்பை: 2027ம் ஆண்டு நடக்கவுள்ள ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்துள்ளது. இதனால் அந்த அணி மீண்டும் தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய 3 நாடுகள் இணைந்து 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை நடத்த உள்ளன. இந்த உலகக்கோப்பைக்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக தகுதி பெறாமல் இருந்தன. அதற்கு குறிப்பிட்ட தரவரிசையை பெற வேண்டிய கட்டாயம் இருந்தது.

இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது. அதேவேளையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நேரடி தகுதி வாய்ப்பு அதிகாரப்பூர்வமாக பறிபோனது.
2027 உலகக்கோப்பை தகுதி விதிகளின்படி, தொடரை நடத்தும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 7 இடங்கள், 2026 செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் அணிகளுக்கு வழங்கப்படும். ஜிம்பாப்வே அணி தரவரிசையில் 11வது இடத்தில் இருந்தாலும், போட்டியை நடத்துவதால் நேரடியாக தகுதி பெறுகிறது. இதனால் தரவரிசையில் முதல் 9 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாகத் தகுதி பெற முடியும்.
தற்போதைய ஐசிசி தரவரிசையில் ஆப்கானிஸ்தான் 8வது இடத்திலும், வங்கதேசம் 9வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 10வது இடத்திலும் உள்ளன. வரும் செப்டம்பர் 30 கெடு தேதிக்குள் வெஸ்ட் இண்டீஸ் அணியால் முதல் 9 இடங்களுக்குள் முன்னேற முடியாது. வரும் செப்டம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு எதிராக நடக்கும் ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், வெஸ்ட் இண்டீஸ் அணியால் 9வது இடத்தைப் பிடிக்க முடியாது.
2 முறை உலகக்கோப்பை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி 2019 மற்றும் 2023 உலகக்கோப்பை தொடர்களிலும் நேரடியாக தகுதிபெறவில்லை. 2019ல் தகுதிச்சுற்று மூலம் தேர்வான அந்த அணி, 2023ல் தகுதிச்சுற்றிலேயே வெளியேறி முதன்முறையாக உலகக்கோப்பையில் ஆடும் வாய்ப்பை இழந்தது. தற்போது 2027 உலகக்கோப்பை தொடருக்காக வெஸ்ட் இண்டீஸ் உடன் இணைந்து அயர்லாந்து அணியும் தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாட உள்ளது.


Click it and Unblock the Notifications

