ஹோட்டலுக்கு வெளியே நள்ளிரவில் பாட்டுச் சத்தம்.. ஜன்னலை எட்டிப்பார்த்து மிரண்டுபோன அபிஷேக், வைபவ்
ஹாமில்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களான இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி மைதானத்தில் மட்டுமல்லாது வெளியிலும் சிறந்த நண்பர்களாக வலம் வருகின்றனர்.இந்நிலையில் நியூசிலாந்தில் உள்ள ஹோட்டல் அறையில் இவர்கள் இருவரும் சீனியர் ஆல்ரவுண்டர் அக்சர் படேலுடன் சேர்ந்து அடித்த லூட்டியும், அதைத் தொடர்ந்து நடந்த விசித்திரமான சம்பவமும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் ஹாமில்டனில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர். அங்கு அபிஷேக் சர்மா, அக்சர் படேல் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் ஒரே அறையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஹோட்டலுக்கு வெளியே இருந்து திடீரென உரத்த குரலில் இசை மற்றும் பாடல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

அறையில் யாரோ பாட்டு வைத்திருக்கிறார்கள் என்று நினைத்த அபிஷேக் சர்மா, அக்சர் படேலிடம் திரும்பி, "எனக்கு தூக்கம் வருகிறது, தயவுசெய்து அந்த பாட்டை நிறுத்துங்கள்" என்றார். ஆனால் வெளியே போராட்டம் நடப்பதை ஏற்கனவே அறிந்திருந்த அக்சர் படேல், அபிஷேக்கை கலாய்க்கும் விதமாக, "பாட்டை நான் வைக்கவில்லை, வைபவ் தான் வைத்துள்ளான்" என்று சிரித்துக் கொண்டே கூறினார். உடனே வைபவ், "நான் இல்லை" என்று அப்பாவித்தனமாக மறுத்தார்.
இதையடுத்து சந்தேகமடைந்த அபிஷேக் சர்மா எழுந்து சென்று ஹோட்டல் அறை ஜன்னலைத் திறந்து வெளியே எட்டிப்பார்த்தார். அங்கு நடு இரவில் கொட்டும் குளிரிலும் சாலையில் மக்கள் கொடிகளைப் பிடித்துக்கொண்டு, பாடல்களை ஒலிக்கவிட்டு விசித்திரமாக போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அபிஷேக் சர்மாவின் கண்கள் மிரண்டுபோயின.
நள்ளிரவில் பாட்டுப் பாடி போராட்டம் நடத்துவதைக் கண்டு திகைத்த அபிஷேக், "யாராவது தயவுசெய்து இது எந்த நாட்டின் கொடி என்று சொல்ல முடியுமா?" எனக் கேட்க, மற்ற இருவரும் சிரித்தனர். களத்தில் எதிரணி பவுலர்களைப் பந்தாடும் அதிரடி வீரர்கள், நடு இரவில் நடந்த இந்த போராட்டத்தால் தூங்க முடியாமல் விழித்த நகைச்சுவை வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications

