12 மேட்ச், பேட்டிங் ஆவரேஜ் 17.. மூன்றாம் வரிசை வீரரால் இந்திய அணிக்கு புதிய தலைவலி.. SENA சொதப்பல்
ஹாமில்டன்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் முக்கிய விக்கெட் கீப்பர் பேட்டரான இஷான் கிஷன், உள்நாட்டில் ரன் மழை பொழிந்தாலும் வெளிநாட்டு ஆடுகளங்களில் படுமோசமாகச் சொதப்பி வருவது இந்திய அணி நிர்வாகத்திற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 260 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய போது, இஷான் கிஷன் 3 பந்துகளைச் சந்தித்து ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி வெளியேறினார். நடப்பு 2026-ம் ஆண்டில் இந்திய அணிக்காக விளையாடிய 36 சர்வதேச டி20 போட்டிகளில் 1,159 ரன்களை 35.12 சராசரியுடனும், 170-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டுடனும் அவர் குவித்துள்ளார். இதில் 1 சதம் மற்றும் 7 அரைசதங்களும் அடங்கும்.

ஆனால் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான செனா (SENA) நாடுகளில் இஷான் கிஷனின் ஆட்டம் தலைகீழாக உள்ளது. இதுவரை இந்த நாடுகளில் ஆடியுள்ள 10 சர்வதேச டி20 இன்னிங்ஸ்களில் அவர் வெறும் 177 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 17.7 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 118 ஆகவும் சரிந்துள்ளது. இதில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடங்கும்.
இந்த ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 0, 49, 13, 4, 56 ரன்களையும், நியூசிலாந்துக்கு எதிரான நடப்பு தொடரில் விளையாடிய 2 போட்டிகளில் 1 மற்றும் 0 ரன்களையும் மட்டுமே அவர் எடுத்துள்ளார். சர்வதேச அரங்கில் இந்த 4 நாடுகளில் அவர் ஆடியுள்ள மொத்தம் 12 போட்டிகளில் (2 ஒருநாள் போட்டிகள் உட்பட) வெறும் 192 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஒட்டுமொத்த சராசரி 16 மட்டுமே.
அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் 2027 ஒருநாள் உலகக் கோப்பையும், அதைத் தொடர்ந்து 2028-ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் டி20 உலகக் கோப்பையும் நடைபெற உள்ளன. இத்தகைய சூழலில், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இஷான் கிஷனின் இந்தத் தொடர் சொதப்பல் இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications


