"ஜடேஜாவின் ஒருநாள் கிரிக்கெட் முடிஞ்சிடுச்சு ஏன்னா..".. முன்னாள் வீரர் புஜாரா அதிரடி கருத்து
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம் பெறவில்லை. இதனால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஜடேஜாவின் எதிர்காலம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டதாக முன்னாள் வீரர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியில் ஜடேஜாவை ஓரங்கட்டிவிட்டு அக்சர் படேலுக்கு அணி நிர்வாகம் தொடர் முன்னுரிமை அளித்து வருகிறது. நியூசிலாந்து ஒருநாள் தொடரிலும் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்படவில்லை. எனவே, அவரின் ஒருநாள் போட்டி எதிர்காலம் முடிந்து விட்டதாக புஜாரா கூறி இருக்கிறார். ஆனால், ஜடேஜா குறிப்பிட்ட சூழல் வந்தால் அணியில் சேர்க்கப்படுவார் என முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

இது குறித்துப் பேசிய புஜாரா, "ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் வாய்ப்பளிக்க அணி நிர்வாகம் விரும்பியிருந்தால், அவரை இந்த நியூசிலாந்து தொடருக்குத் தேர்வு செய்திருக்க வேண்டும். அவரது வயது மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துமாறு அவரிடம் அணி நிர்வாகம் தெளிவாகப் பேசியிருக்கக் கூடும். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் (ஒருநாள், டி20) முதன்மை ஆல்ரவுண்டராக அக்சர் படேல் உருவெடுத்து விட்டதால், ஜடேஜாவை அவர்கள் இனி பரிசீலிக்க வாய்ப்பில்லை" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
அதே சமயம், ஜடேஜா இன்னும் இந்திய அணியின் அவசரக் காலத்தில் தேவைப்படும் அனுபவ வீரராக இருப்பார் என முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் கூறியுள்ளார். "ஜடேஜா உடனே அணிக்குத் திரும்ப முடியாமல் போகலாம். ஆனால் உலகக் கோப்பைக்கு முன்பாக அக்சர் படேலுக்கு எதிர்பாராதவிதமாக ஏதேனும் காயம் ஏற்பட்டால், அணி நிர்வாகத்தின் முதல் தேர்வு ஜடேஜாவாகவே இருக்கும். அக்சருக்கு அடுத்தபடியாக இந்திய அணிக்கு ஜடேஜா ஒரு இன்சூரன்ஸ் பாலிசி போல எப்போதும் இருப்பார்" என்றார்.
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட முக்கியமான ஒருநாள் தொடர் வரும் புதன்கிழமை தொடங்க உள்ள சூழலில், ஜடேஜாவின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த புஜாராவின் இந்தக் கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications

