ரஷித் கான் மாபெரும் சாதனை.. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சுழற்பந்துவீச்சாளர் என கருத்து
பீரெடி: ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டின் 4999 போட்டியாகும்.
27 வயதான இந்த லெக்-ஸ்பின்னர், அயர்லாந்தின் பிரெடி கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்ற இப்போட்டியில் 7.4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் மட்டுமே வழங்கி 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.அயர்லாந்து இன்னிங்ஸின் 15-வது ஓவரின் முதல் பந்தில் தொடக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ பால்பிர்னியை 36 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து ரஷித் கான் தனது விக்கெட் வேட்டையைத் தொடங்கினார்.

அதன் பின்னர் ஹாரி டெக்டர் 5 ரன்களிலும், பெஞ்சமின் காலிட்ஸ் 27 ரன்களிலும், கர்டிஸ் காம்பர் 23 ரன்களிலும், ஜெய் மூந்திரா 3 ரன்களிலும் மற்றும் பைரன் மெக்டொனொக் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து அயர்லாந்து அணியின் பேட்டிங் வரிசையை சரித்தார்.
2015ஆம் ஆண்டு புலவாயோவில் ஜிம்பாப்வேக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ரஷித் கான், இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் அயர்லாந்துக்கு எதிராக 9.3 ஓவர்களில் 43 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 8.4 ஓவர்களில் 18 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்திய உலக சாதனையை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் வைத்துள்ளார். அவர் தனது 14 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையான 1989 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில் 262 போட்டிகளில் விளையாடி 5 முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரஷித் கான் தற்போது 3 முறை இச்சாதனையை நிகழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இலங்கையின் சமிந்த வாஸ் 322 போட்டிகளில் 2 முறையும், நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் 114 போட்டிகளில் 2 முறையும், இலங்கையின் வனிந்து ஹசரங்க 71 போட்டிகளில் 2 முறையும், தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் 107 போட்டிகளில் 2 முறையும் மற்றும் பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி 398 போட்டிகளில் 2 முறையும் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
ரஷித் கானின் அசத்தலான பந்துவீச்சின் உதவியோடு, அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி, 33.2 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.


Click it and Unblock the Notifications

