73 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள்.. கோடு போட்ட ஷகிப் அல் ஹசன்.. ரோடு போட்ட வங்கதேச பவுலர்கள்!
தரம்சாலா: வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெறும் 73 ரன்கள் இடைவெளியில் 9 விக்கெட்டுகளையும் இழந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 3வது லீக் போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் குர்பாஸ் - ஜத்ரான் இணை களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ஜத்ரான் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணி 83 ரன்கள் எடுத்திருந்த போது ரஹ்மத் 18 ரன்கள் எடுத்து 2வது விக்கெட்டாக வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஷாகிடி 18 ரன்களில் ஆட்டமிழக்க 112 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் சிறப்பாக ஆடிய குர்பாஸ் 47 ரன்களிலும், நஜிபுல்லா 5 ரன்களிலும், நபி 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் களத்தில் இருந்த ரஷீத் கான் 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியாக வெறும் 37.2 ஓவர்களுக்கு ஆஃப்கானிஸ்தான் அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. வங்கதேச அணி தரப்பில் முதல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கேப்டன் ஷகிப் அல் ஹசன் கோடு போட, பின்னர் வந்த மெஹதி ஹசன் மிராஸ் மற்றும் சோரிஃபுல் இஸ்லாம் இருவரும் ரோடே போட்டுவிட்டனர் என்று சொல்லலாம். மெஹதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுகளையும், சொரிஃபுல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சரியாக 73 ரன்களுக்கு ஆஃப்கானிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளையும் தாரை வார்த்துள்ளது.

இதன் மூலம் வங்கதேசம் அணி 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது. இதுவரை உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணியை மட்டுமே ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தி இருக்கிறது. அந்த சாதனையை வங்கதேசம் அணியை வீழ்த்தி முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் 157 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், வங்கதேச அணி எளிமையாக வெல்லும் என்று பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications