சிக்கினால் கதை ஓவர்.. இளம் வீரருக்கு காத்திருக்கும் சவால்.. மும்பை லாபியால் கூட காப்பாற்ற முடியாது!
மொஹாலி: ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கவுள்ளார். இன்றைய போட்டி ஸ்ரேயாஸ் ஐயருக்கு அக்னி பரீட்சையாக அமைந்துள்ளது.
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு மிகமுக்கியமான காரணங்களில் நம்பர் 4 பேட்ஸ்மேன் யார் என்பதை கடைசி வரை முடிவு செய்யாததும் ஒன்று. இதனால் உடனடியாக ஸ்ரேயாஸ் ஐயரை நம்பர் 4ல் களமிறக்கி இந்திய அணி தயார் செய்தது. அதற்கேற்ப ஸ்ரேயாஸ் ஐயரும் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

ஷார்ட் பால் பிரச்சனை இருந்தாலும், ஸ்பின்னர்களை விளாசும் பலம் கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார். கடந்த 4 ஆண்டுகளில் 39 இன்னிங்ஸ்களில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 1,645 ரன்களை விளாசி இருக்கிறார். அதேபோல் இந்திய மிடில் ஆர்டர் வீரர்களில் 45.69 பேட்டிங் சராசரியுடன் விளையாடும் ஒரே வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தான்.
இதனை மனதில் வைத்து தான் 6 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பினாலும், உடனடியாக உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஆசியக் கோப்பை தொடரில் 2 போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு போட்டியில் மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதில் 14 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதன்பின் முதுகு பிடிப்பு காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் இருந்து விலகினார்.
இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அக்னி பரீட்சையாக மாறியுள்ளது. ஏற்கனவே இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடியிருப்பதால், ஸ்ரேயாஸ் ஐயரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று யோசனையில் கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டம் மீது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 போட்டிகளே ஸ்ரேயாஸ் ஐயருக்கு உலகக்கோப்பை அணியில் இடத்தை உறுதி செய்யும்.
ஏனென்றால் அணியில் மாற்றங்கள் செய்வதற்கு செப்.28ஆம் தேதியே கடைசி நாளாகும். அதேபோல் முன்னாள் வீரர்களான கவுதம் கம்பீர், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்டோர் ஸ்ரேயாஸ் ஐயரை காட்டமாக விமர்சித்து வருகின்றனர். ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் சொதப்பினாலோ, அல்லது மீண்டும் காயமடைந்தாலோ மாற்று வீரர்களை கொண்டு வருவதற்கு இந்திய அணி நிர்வாகம் தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications