”இதுபோதும் தல” கடைசி 2 பந்தில் 2 சிக்சர்களை சிதறவிட்ட தோனி.. பஞ்சாப் அணிக்கு 201 ரன்கள் இலக்கு!
சென்னை: பஞ்சாப் அணி வெற்றிபெறுவதற்கு 201 ரன்களை இலக்காக சென்னை அணி நிர்ணயித்துள்ளது. சென்னை அணியில் அதிகபட்சமாக கான்வே 52 பந்துகளில் 92 விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார்.
16வது ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்கியது. இதனைத் தொடர்ந்து சென்னை அணி சார்பாக ருதுராஜ் கெய்க்வாட் - கான்வே இணை வழக்கம் போல தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

முதல் இரு ஓவர்களில் நிதானம் காட்டிய சென்னை அணி, 3வது ஓவரில் இருந்து அதிரடியை தொடங்கியது. 5 ஓவர்கள் முடிவில் 41 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் பவர் பிளேவின் கடைசி ஓவரில் அதிரடியாக ஆட வேண்டிய தேவை இருந்தது. அந்த ஓவரில் 16 ரன்கள் விளாசப்பட, 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் அடித்தது. இதனைத் தொடர்ந்து தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து ரஹானே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய ஏதுவாக தோனி, இளம் வீரர் சிவம் துபேவை களத்திற்கு அனுப்பினார். இதனால் பஞ்சாப் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் அட்டாக்கிற்கு கொண்டு வரப்பட்டனர். இதனிடையே இன்னொரு பக்கம் அதிரடியாக ஆடிய டெவான் கான்வே 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதேபோல் சிவம் துபேவும் வழக்கம் போல் சிக்சர்களை விளாசினார். இதனால் சென்னை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

இதனைத் தொடர்ந்து சிக்சர் அடிக்கும் முயற்சியில் சிவம் துபே 28 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த மொயின் அலி 10 ரன்களில் வீழ்ந்தார். இருப்பினும் 17 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 169 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து அடுத்த 2 ஓவர்களில் சென்னை அணி வெறும் 16 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதனால் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே ஜடேஜா 12 ரன்களில் ஆட்டமிழக்க, தல தோனி களம் புகுந்தார். அப்போது தோனி.. தோனி.. என்று உற்சாக கரகோஷம் விண்ணை தொட்டது.
இதையடுத்து கடைசி ஓவரின் முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இந்த நிலையில் 5வது பந்தில் தோனி சிக்சர் விளாச, பின்னர் மீண்டும் கடைசி பந்தில் சிக்சரை விளாசி அசத்தினார். இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் தோனி.. தோனி என்ற கரகோஷம் உச்சத்தை எட்டியது. இதன் மூலம் 20 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள விளாசியுள்ளது.


Click it and Unblock the Notifications