தனிஒருவனாக போராடிய பிரப்சிம்ரன் சிங்.. ஐபிஎல் தொடரில் முதல் சதம்.. டெல்லி அணிக்கு சவாலான இலக்கு!
டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பிரப்சிம்ரன் சிங்கின் அபாரமான சதத்தால் பஞ்சாப் அணி 167 ரன்களை சேர்த்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் டெல்லி அணியில் ரிப்பல் படேல் நீக்கப்பட்டு பிரவீன் துபே சேர்க்கப்பட்டார். அதேபோல் பஞ்சாப் அணி சார்பாக ராஜபக்சே நீக்கப்பட்டு சிக்கந்தர் ராசா சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி சார்பாக பிரப்சிம்ரன் சிங் - ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

அதில் ஷிகர் தவான் 7 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த லிவிங்ஸ்டன் 4 ரன்களிலும், ஜித்தேஷ் சர்மா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் மறுபக்கம் மற்றொரு தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங்கின் அதிரடியான ஆட்டத்தால் பஞ்சாப் அணி பவர் பிளே ஓவர்களில் 46 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து சாம் கரண் - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக 10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 66 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
இந்த நிலையில் 11வது ஒவரை வீசிய மிட்செல் மார்ஷ் பந்தில் பிரப்சிம்ரன் சிங் இரு சிக்சர்கள், ஒரு பவுண்டரியை விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதையடுத்து 42 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதையடுத்து ஒவ்வொரு ஓவரிலும் ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரியை பிரப்சிம்ரன் சிங் விளாச தொடங்கினார். இதனிடையே சாம் கரண் 20 ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்ப்ரீத் ப்ரார் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் 59 பந்துகளில் சதம் கடந்து மிரட்டினார். இதன் காரணமாக 18 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை சேர்த்தது. பின்னர் முகேஷ் குமார் வீசிய 19வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் 103 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. தொடர்ந்து கலீல் அஹ்மத் வீசிய கடைசி ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை சேர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications