”எல்லாம் அஸ்வின் செயல்” ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறிய அதர்வா தய்டே.. பஞ்சாப் கொடுத்த ட்விஸ்ட்!
தரம்சாலா: நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரிட்டயர்ட் அவுட் முறையில் பஞ்சாப் அணியின் அதர்வா தய்டே வெளியேறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 64வது போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக ரூஸோவ் 37 பந்துகளில் 82 ரன்களும், ப்ரித்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து பஞ்சாப் அணி களமிறங்கிய நிலையில், கேப்டன் ஷிகர் தவான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங்கும் 22 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் லிவிங்ஸ்டன் - அதர்வா தய்டே கூட்டணி இணைந்தது. இந்த கூட்டணி தொடக்கத்தில் நிதானமாக ரன்கள் சேர்த்த நிலையில், பின்னர் அதிரடிக்கு மாறியது. குறிப்பாக லிவிங்ஸ்டன் இமாலய சிக்சர்களை விளாசி தள்ளினார். ஆனால் மறுபக்கம் நின்றிருந்த அதர்வா தய்டேவுக்கு பவுண்டரி விளாசுவதே பெரும் சுமையாக இருந்தது.
இருப்பினும், 38 பந்துகளில் அதர்வா தய்டே அரைசதம் கடந்து அசத்தினார். இந்த நிலையில் பஞ்சாப் அணி 15 ஓவர்கள் முடிவில் 128 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் கடைசி 5 ஓவர்களில் 87 ரன்கள் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அதிரடியாக ஆட வேண்டிய நிலையில் பஞ்சாப் அணி இருந்ததால், திடீரென 55 ரன்களோடு களத்தில் இருந்த அதர்வா தய்டே ரிட்டயர் அவுட் முறையில் வெளியேறினார்.

இதனால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் ர்ட்டயர்ட் அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற பெயரை அதர்வா தய்டே எடுத்துள்ளார். கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிய அஸ்வின், ரிட்டயர்ட் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications