க்ருனால் பாண்டியாவின் அதிர்ச்சி தாக்குதல்.. காப்பாற்றிய கிளாஸன், சமத்.. லக்னோவுக்கு கவுரவ இலக்கு!
ஐதராபாத்: லக்னோ அணி வெற்றிபெறுவதற்கு 183 ரன்களை இலக்காக ஐதராபாத் அணி நிர்ணயித்துள்ளது. ஐதராபாத் அணி சார்பாக கிளாஸன் 47 ரன்களும், சமத் 37 ரன்களும் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரின் 58வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனால் சொந்த மண்ணில் ஐதராபாத் அணி அடைந்த ஹாட்ரிக் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஐதராபாத் அணி சார்பாக அன்மோல்ப்ரீத் - அபிஷேக் சர்மா கூட்டணி களமிறங்கியது. ஐதராபாத் அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய நிலையில், அபிஷேக் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ராகுல் த்ரிப்பாட்டி ஆவேஷ் கான் பந்துவீச்சில் அடுத்தடுத்து சில பவுண்டரிகளை விளாசினார். ஆனால் யாஷ் தாக்கூர் வீசிய எதிர்பாராத பவுன்சரால் த்ரிப்பாட்டி 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர் அன்மோல்ப்ரீத் சிங் 36 ரன்களிலும், கேப்டன் மார்க்ரம் 20 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஐதராபாத் அணி 115 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் அதிரடி வீரர் கிளாஸனுடன் - அப்துல் சமத் இணைந்தார். 15 ஓவர் வரை நிதானம் காட்டிய ஐதராபாத் அணி, பின்னர் அதிரடிக்கு மாறியது. அமித் மிஸ்ரா வீசிய 16வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சரை விளாசி அசத்தினார்.

தொடர்ந்து 17வது ஓவரை வீசிய க்ருனால் பாண்டியா பந்துவீச்சில் அப்துல் சமத் சிக்சரை விளாசி தள்ளினார். பின்னர் ஆவேஷ் கான் வீசிய 19வது ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 47 ரன்கள் எடுத்து கிளாஸன் ஆட்டமிழந்தார். இதையடுத்து கடைசி ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்துள்ளது. கடைசி வரை ஆடிய அப்துல் சமத் 25 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார்.


Click it and Unblock the Notifications