இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட யுவராஜ்சிங் பேட்டால் பதிலடி.. அடுத்தடுத்து 2 சதங்கள் விளாசல்
புனே: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்படாத நிலையில் ரஞ்சி கோப்பை போட்டியில் இரு சதங்கள் அடித்து அசத்தியுள்ளார் யுவராஜ்சிங்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகளில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 30 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் அதிரடி ஆட்டக்காரரும், ஆல் ரவுண்டருமான யுவராஜ் சிங் பெயர் இல்லை.

இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையில் பஞ்சாப் அணிக்காக யுவராஜ் விளையாடி வருகிறார். ஹரியானாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 59 ரன்கள் எடுத்த யுவராஜ், இரண்டாவது இன்னிங்சில் 160 பந்துகளில் 130 ரன்களை குவித்தார். இதில் 14 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும்.
அதேபோல இன்று பலம் வாய்ந்த மகாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியிலும் யுவராஜ்சிங் சதம் அடித்துள்ளார். புனேயில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா 201 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தேனீர் இடைவேளையின்போது யுவராஜ்சிங் 114 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் 262 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதன்மூலம் அடுத்தடுத்த போட்டிகளில் யுவராஜ் சதம் எடுத்து அசத்தியுள்ளார். 2013ம் ஆண்டு டி20 கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆடிய பிறகு யுவராஜ்சிங்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. உலக கோப்பை இறுதி போட்டியில் மிகவும் மோசமாக ஆடி பலரது விமர்சனங்களை யுவராஜ் சம்பாதித்தார் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications