சதம் தவறினாலும் சாம்பியன் தான்யா நீ.. இந்திய அணியின் மானம் காத்த ரஹானே.. ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்!
லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் அனுபவ வீரர் அஜிங்கியா ரஹானே 89 ரன்களில் ஆட்டமிழந்து, சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். இதனால் இந்திய அணி சிக்கலில் சிக்கியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து தடுமாறிய நிலையில், 3ஆம் நாளின் முதல் ஓவரிலேயே கேஎஸ் பரத் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அஜிங்கியா ரஹானே - ஷர்துல் தாக்கூர் கூட்டணி இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

சிறப்பாக ஆடிய ரஹானே அரைசதம் கடந்து அதிரடியாக ஆடினார். இன்னொரு பக்கம் கடுமையாக போராடி, ஷர்துல் தாக்கூர் ரஹானேவுக்கு சிறந்த கம்பெனியை கொடுத்தார். இதனால் இவர்களின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதல்முறையாக இந்திய அணிக்காக இருவரும் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை சேர்த்து சாதனை படைத்தனர்.
இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி உணவு இடைவேளையின் போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்களை சேர்த்தது. இதன் மூலம் நிச்சயம் இந்திய அணி ஃபாலோ ஆன் தவிர்க்கும் என்று பார்க்கப்பட்டது. ரஹானே 89 ரன்களுடன் களத்தில் இருந்ததால், சதம் விளாசுவார் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.
இந்த செஷனின் 2வது ஓவரிலேயே ரஹானே அடித்த பந்தை அபாரமாக கேட்ச் பிடித்து க்ரீன் அசத்தினார். இதனால் இந்திய வீரர் ரஹானே 89 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதோடு, 11 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். இருப்பினும் 512 நாட்களுக்கு பின் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த ரஹானே, அணிக்கு தேவையான நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications