எனக்கு அப்படி என்ன வயதாகிவிட்டது? இன்னும் நிறைய கிரிக்கெட் இருக்கிறது.. விமர்சனத்துக்கு ரஹானே பதிலடி
டோமினிக்கா : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் துணை கேப்டனாக ரகானே களம் இறங்கி உள்ளார்.
ரஹானேவுக்கு வயதாகி விட்டதாகவும் அவரை அணியை விட்டு நீக்க முயற்சி நடப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது. இது குறித்து பதில் அளித்த ரகானே அப்படி எனக்கு என்ன வயதாகிவிட்டது.

நான் இன்னும் இளம் வீரராக தான் உணர்கிறேன். கடந்த ஒரு ஆண்டாக என்னுடைய உடல் தகுதியில் நான் கடுமையாக கவனம் செலுத்தினேன். பேட்டிங்கில் சிலவற்றிலும் நான் பயிற்சி செய்தேன். என்னுடைய கிரிக்கெட்டை நான் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன். எதிர்காலத்தை குறித்து நான் கவலைப்படுவதில்லை. ஒவ்வொரு போட்டியுமே எனக்கு முக்கியமானது. ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளில் நான் விளையாடும் போது எனக்கு ஆங்கர் ரூல் தான் கொடுத்தார்கள்.
ஆனால் சிஎஸ்கேவில் விளையாடும் போது என்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சுதந்திரம் கொடுத்தார்கள். அதனால் நான் ரன் குவிக்க முயற்சி செய்தேன். அது எனக்கு பலன் கிடைத்தது. இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மா எனக்கு ஒரு பணியை கொடுத்திருக்கிறார். அதை நான் நிறைவேற்றுவேன் என்று நம்புகிறேன்.
ரோகித் சர்மாவும் எனக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அது சிறந்த கேப்டனுக்கு அழகு என்று நினைக்கிறேன். நான் துணை கேப்டனாக ஐந்தாண்டுகள் செயல்பட்டு இருக்கிறேன். மீண்டும் அந்த பொறுப்புக்கு வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஜெய்ஸ்வால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். அவருக்கு எனது அறிவுரை என்னவென்றால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக விளையாட வேண்டும் என்பதுதான்.
எங்கள் அணியில் முகமது சமி இல்லை. அவருக்கு பதிலாக ஜெய்தேவ் உனாட்கட், ஷர்துல் தாக்கூர், நவதீப் சைனி போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன். அதேசமயம் நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியை பலவீனமாக நினைக்கவில்லை. மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நிச்சயமாக அவர்கள் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் என்று ரஹானே கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications