ரோஹித் சர்மாவை தொட்டதால் வந்த வினை.. அஜித் அகர்கர் பதவி நீட்டிப்பில் இழுபறி.. பிசிசிஐ ஆலோசனை
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிப்பது தொடர்பாக, பிசிசிஐ உயர்மட்ட அதிகாரிகள் அவருடன் ஆலோசனை நடத்த உள்ளனர். மூத்த வீரர் ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பாக எழுந்துள்ள கருத்து வேறுபாடே இந்த இழுபறிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
அஜித் அகர்கர் தலைமை தேர்வுக் குழு தலைவராக 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அவருக்கு மேலும் ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்க பிசிசிஐ முதலில் திட்டமிட்டிருந்தது. இவரது தேர்வுக்குழுவின் கீழ் இந்திய அணி 2 டி20 உலகக்கோப்பைகள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி உட்பட 3 ஐசிசி கோப்பைகளையும், 2 ஆசிய கோப்பைகளையும் வென்று அசத்தியுள்ளது.

வரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பையை மனதில் கொண்டு யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தேர்வுக்குழு முடிவு செய்தது. இதனால் இங்கிலாந்து தொடருக்குப் பின் ஒருநாள் அணியில் இருந்து ரோஹித் சர்மாவை விடுவிக்க தேர்வுக்குழு திட்டமிட்டிருந்தது.
ஆனால், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 138 ரன்கள் குவித்து தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். அதே சமயம், ரோஹித் தொடர்ந்து ஒருநாள் அணியில் நீடிப்பார் என பிசிசிஐ நிர்வாகமும் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தது. அணி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்த பிறகே ரோஹித்தை நீக்க தாங்கள் முடிவெடுத்த நிலையில், பிசிசிஐயின் இந்த பகிரங்க ஆதரவு தேர்வுக்குழுவினரிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக அஜித் அகர்கருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அவருக்கு பதிலாக முன்னாள் ஜாம்பவான் வி.வி.எஸ்.லக்ஷ்மணை புதிய தேர்வுக் குழு தலைவராக நியமிக்கவும் பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து இப்போதைக்கு ஓய்வுபெறும் திட்டம் இல்லை என ரோஹித் சர்மா உறுதியாக உள்ளதால், அடுத்து சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடக்கும் ஒருநாள் தொடரில் அவர் விளையாட அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications

