ஐபிஎல் தொடருக்கு பெரும் சிக்கல்.. திடீரென காலை வாரிய அமேசான், கூகுள்.. பல்லாயிரம் கோடிகள் இழப்பு??
மும்பை: ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யவிருந்த அமேசான், கூகுள் நிறுவனங்கள் திடீரென பின் வாங்கியுள்ளன.
ஐபிஎல் தொடரில் 2018 - 2022 வரையிலான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமைகள் இந்தாண்டுடன் முடிவடைந்தது.
எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கான உரிமைகளுக்கான ஏலம் வரும் ஜூன் 12ம் தேதி தொடங்குகிறது.

ஒளிபரப்பு உரிமை
கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரையிலான ஒளிபரப்பு உரிமைகள் சுமார் ரூ.16,000 கோடி வரை ஏலம் போனது. ஆனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமை ரூ.65,000 கோடி வரை ஏலம் கேட்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ-ம் அதற்கேற்றார் போல போட்டிகளின் எண்ணிக்கையை, சீசனுக்கு 94 போட்டிகள் என மாற்றி அமைக்க திட்டமிட்டு வருகிறது.

என்ன காரணம்
இந்த முறை ஏலம் கேட்பதற்காக பல பெரும் நிறுவனங்கள் போட்டிப்போட்டன. இந்தியாவின் சார்பில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ரிலையன்ஸ் வியாகாம், சோனி உள்ளிட்ட நிறுவனங்களும், சர்வதேச புகழ்பெற்ற யூடியூப், அமேசான், கூகுள் நிறுவனங்களும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டின. இதனால் ஐபிஎல்-ன் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

அமேசான் திடீரென விலகல்
இந்நிலையில் இந்த ரேஸில் இருந்து திடீரென அமேசான் விலகியுள்ளது. இதற்கான காரணமும் கசிந்துள்ளது. அதாவது இந்திய சந்தையில் அமேசான் ஏற்கனவே பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளது. இனி மேலும் 70 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யும் அளவிற்கு ஐபிஎல்-ஐ பெரிதாக பார்க்கவில்லை எனத்தெரிகிறது. இதே முடிவை தான் கூகுள் நிறுவனமும் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிசிசிஐ-க்கு தலைவலி
சர்வதேச நிறுவனங்கள் போட்டி போட வந்ததால் தான், ஐபிஎல்-ன் மதிப்பு ரூ.16,000 கோடியில் இருந்து ரூ.65,000 கோடி வரை உயர்ந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையால், பிசிசிஐ-க்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனத்தெரிகிறது. எனினும் இந்த ரேஸில் யூடியூப் நிறுவனம் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications