ரொம்ப சாரி..! டீமில் சேர்த்துக்குங்க..! மறுபடியும் விளையாடுறேன்..! பிசிசிஐக்கு வீரரின் கெஞ்சல்..!
மும்பை: கிரிக்கெட் விளையாட முடிவு செய்துள்ளதால், அது குறித்து பிசிசிஐக்கு கடிதம் எழுத இருப்பதாக அம்பத்தி ராயுடு கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு. இந்திய அணிக்காக 4ம் இடத்தில் களமிறங்கி விளையாடி வந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
4ம் இடத்துக்கு தகுதியான வீரர் கிடைத்துவிட்டார் என்று ரவி சாஸ்திரி, கோலியும் அம்பத்தியை தான் கைகாட்டி இருந்தனர். இந்திய கிரிக்கெட் வாரியமும் ஒரு கட்டத்தில் இதையே தான் கூறியது.

அணியில் இல்லை
ஆனால் உலக கோப்பை தொடரில் அவர் கழற்றிவிடப்பட்டார். அதனால் அதிர்ச்சி அடைந்த அம்பத்தி ராயுடு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அம்பத்தி பேட்டி
இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி வி பார்த்தசாரதி கோப்பையில் விளையாட அம்பத்தி சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

4 ஆண்டுகள் பயிற்சி
உலக கோப்பைக்காக நான் 4 ஆண்டுகளாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். ஆனால், என்னை தேர்ந்தெடுக்க வில்லை. இது எனக்கு மிகவும் ஏமாற்றத்தை தந்தது. எனவே, இதுவே நான் ஓய்வு பெற வேண்டிய தருணம் என்று எனது மனதுக்கு தோன்றியது.

முடிவு
அதனால், ஓய்வு முடிவை அதிரடியாக அறிவித்தேன். எதிர்பார்த்தது கிடைக்காமல் போனதால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது சரி என்று நினைத்து எடுத்த முடிவு தான். ஆனால் தற்போது மீண்டும் இன்னும் சில வருடங்கள் கிரிக்கெட் விளையாடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இது பற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுத இருக்கிறேன். அதோடு ஐபிஎல் போட்டிகளிலும் நான் தொடர்ந்து விளையாடுவேன்.

ஏற்றுக்கொள்வேன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எனக்கு எப்போதும் ஆதரவு தந்துள்ளது. எனவே அந்த அணிக்காக நான் நிச்சயம் ஆடுவேன். என்னுடைய உடல்தகுதி சரி செய்து கொண்டு மீண்டும் பழைய இடத்திற்கு திரும்புவேன். மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் அதை ஏற்றுக்கொள்வேன் என்றார்.


Click it and Unblock the Notifications