மும்பை: நியூசிலாந்து அணியின் டிம் சவுதி வீசிய பந்தில் விராட் கோலியின் தொடையில் தட்டி சென்ற நிலையில், அதற்கு நியூசிலாந்து அணியின் ரிவ்யூ எடுத்த போது நடிகை அனுஷ்கா சர்மா கடவுளை கும்பிட்ட வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் பின் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. நியூசிலாந்து அணி தரப்பில் முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார்.

தொடக்கம் முதலே ரோகித் சர்மா அதிரடியாக சிக்ஸ் மற்றும் பவுண்டரியாக விளாசி தள்ளினார். குறிப்பாக போல்ட் பந்தில் அடுத்தடுத்த ஓவர்களில் பொளந்து கட்டினார். இதன் காரணமாக 6 ஓவர்களிலேயே இந்திய அணியின் ஸ்கோர் 58 ரன்களாக எகிறியது. இதனால் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் உடனடியாக போல்ட்-ஐ அட்டாக்கில் இருந்து மாற்றி ஃபெர்குசனை கொண்டு வந்தார்.
இதன்பின் ரோகித் சர்மா அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிம் சவுதி வீசிய 8.2 ஓவரில் ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலி களத்திற்குள் வர, நியூசிலாந்து அணி திடீரென அட்டாக்கிங் மோடுக்கு மாறியது. இதனால் வான்கடே மைதானமே பரபரப்பாகியது.
அதற்கேற்றபடி ரோகித் சர்மா ஆட்டமிழந்த அதே ஓவரின் 4வது பந்து விராட் கோலியின் தொடையை தட்டி பவுண்டரிக்கு சென்றது. இதனால் நியூசிலாந்து அணி வீரர்கள் ஒட்டுமொத்தமாக நடுவரிடம் அவுட் என்று அப்பீல் கேட்க, அவர் நாட் அவுட் என்றார். இதன் காரணமாக உடனடியாக கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்றாவது நடுவரிடம் அப்பீல் செய்தார்.
அப்போது கேமரா மேன் உடனடியாக விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா பதற்றத்துடன் அமர்ந்திருப்பதை காட்ட, அவரின் பதற்றம் ரசிகர்களுக்கும் தொற்றிக் கொண்டது. இதன்பின் கேமரா ரீப்ளேவில் பார்த்த போது, சவுதி வீசிய பந்து விராட் கோலியின் பேட்டில் அடித்து பின் தொடையில் பட்டு பவுண்டரிக்கு சென்றது தெரிய வந்தது. இதனால் நிம்மதியடைந்த அனுஷ்கா சர்மா கடவுளை கும்பிட்டு நன்றி கூறினார்.
அவர் கடவுளுக்கு நன்றி கூறிய வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். மீண்டும் அதுபோல் நடந்துவிடக் கூடாது என்பதால், அனைவரும் பதற்றமடைந்தது குறிப்பிடத்தக்கது.