சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் நிச்சயதார்த்தம்.. பிரபல தொழிலதிபர் பேத்தி சானியாவுடன் நிச்சயம்
மும்பை: கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு, மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் பேத்தியுடன் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்தச் செய்தி கிரிக்கெட் மற்றும் வர்த்தக உலகில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட்டில் தனது தந்தை வழியில், இடது கை வேகப்பந்து வீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும் வலம் வரும் அர்ஜுன் டெண்டுல்கரின் வாழ்க்கைத்துணையாக வரப்போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. தற்போது அந்த எதிர்பார்ப்புகளுக்கு விடை கிடைத்துள்ளது.

யார் அந்தப் பெண்?
அர்ஜுன் டெண்டுல்கர் கைப்பிடிக்கப் போகும் அந்தப் பெண்ணின் பெயர் சானியா சந்தோக். இவர் மும்பையின் பிரபல தொழிலதிபரும், ஹாஸ்பிடாலிட்டி துறையில் கொடிகட்டிப் பறப்பவருமான ரவி காய் என்பவரின் பேத்தியாவார். ரவி காய், புகழ்பெற்ற இன்டர்காண்டினென்டல் ஹோட்டல் மற்றும் புரூக்ளின் கிரீமரி ஐஸ்கிரீம் பிராண்ட் ஆகியவற்றின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சானியா சந்தோக், தனது தாத்தாவைப் போலவே ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக முயன்று வருகிறார். இவர் விலங்குகள் மீது கொண்ட பிரியத்தால், மும்பையில் செல்லப் பிராணிகளுக்கான 'மிஸ்டர் பாவ்ஸ்' (Mr Paws) என்ற சலூனை நிறுவி நடத்தி வருகிறார்.
ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்
அர்ஜுன் மற்றும் சானியாவின் நிச்சயதார்த்த விழா, இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட ஒரு ரகசிய நிகழ்வாக மும்பையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்களோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்போ டெண்டுல்கர் குடும்பத்தின் சார்பில் இதுவரை வெளியிடப்படவில்லை.
இருப்பினும், இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அர்ஜுன் - சானியா ஜோடிக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கப் போராடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர், தற்போது தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் குடும்பம், மறுபுறம் வர்த்தக உலகின் பெரும்புள்ளியின் குடும்பம் இணைவது, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. விரைவில் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications