மும்பை: அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்கவுள்ள உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இறுதி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் 4வது முறையாக 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. அக்.5ஆம் தேதி முதல் நவ.19ஆம் தேதி வரை நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், நவ.19ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்கான பயிற்சிகளை பணிகளையும், அணிகளையும் அனைத்து நாடுகளும் கட்டமைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணிக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் யார் என்பதை பிசிசிஐ தேர்வுக் குழு இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டி முடிவடைந்த நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் மற்றும் அவர்களுக்கான மாற்று வீரர்கள் கொண்ட 15 பேர் கொண்ட அணி இறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகக்கோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை 30 நாட்களுக்கு முன்பாக அனைத்து நாடுகளும் அறிவிக்க வேண்டும். இதன்படி செப்.5ஆம் தேதிக்குள் அணிகளை அறிவிக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக உலகக்கோப்பை தொடருக்கான இறுதி அணியை முடிவு செய்ய நாளை அஜித் அகர்கர், ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் சந்திக்க உள்ளனர்.
இதன்பின்னர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் பாகிஸ்தான் போட்டியின் மூலமாகவே இந்திய அணி இறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அணியில் பந்துவீச்சாளர்களாக பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஆல் ரவுண்டர்களாக ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஃபிட்னஸை எட்டியிருப்பதால் விக்கெட் கீப்பர்களாக கேல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். பின்னர் டாப் ஆர்டரில் சுப்மன் கில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரும் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இதனால் இளம் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் உலகக்கோப்பை அணியில் இருந்து கழற்றவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஆசியக் கோப்பை அணியில் இடம்பிடித்த பிரசித் கிருஷ்ணா மற்றும் திலக் வர்மா இருவரும் உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மாலை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.