மும்பை: நவீன கிரிக்கெட் உலகில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே அதிகம் நிறைந்துள்ள நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு எதிர்காலம் குறித்து மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்வி எழுப்பி இருக்கிறார். குறிப்பாக, முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் பந்துவீச்சுத் துறை என்னவாகும் என்ற மிகப்பெரிய கேள்வியை அவர் முன்வைத்துள்ளார்.
ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் வலிமையாக உள்ளதாகக் கூறிய அஸ்வின், அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய அணி பேட்டிங்கின் மூலம் பல கோப்பைகளை வெல்லும் எனத் தெரிவித்தார். ஆனால், பந்துவீச்சின் நிலை அப்படி இல்லை என அவர் எச்சரித்துள்ளார். "பேட்டிங் செய்வது போல பந்துவீச்சு பார்ப்பதற்கு அவ்வளவு ஈர்ப்பாக இல்லை. சிக்ஸர்கள் அடிப்பதே ரசிகர்களை அதிகம் மகிழ்விக்கிறது. இதனால், எதிர்காலத்தில் குழந்தைகள் பந்துவீச்சை ஒரு விளையாட்டாகத் தேர்ந்தெடுக்கத் தயக்கம் காட்டலாம். பந்துவீச்சின் மூலம்தான் தொடர்களையோ அல்லது கோப்பைகளையோ வெல்ல முடியும் என்பதை யார் சிந்திப்பார்கள்?" என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிகளில் மிக முக்கியப் பங்காற்றி வரும் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பிறகு, அந்த இடத்தை நிரப்பப் போவது யார் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளதாக அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார். ஒருகாலத்தில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ் என மிகப்பெரிய வேகப்பந்து வீச்சுப் படை இந்திய அணியில் இருந்தது. ஆனால், தற்போது பும்ரா மற்றும் சிராஜுக்குப் பிறகு சிறப்பான பந்துவீச்சாளர்கள் அதிக அளவில் இல்லை.

உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபிக்கும் பலருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும், சர்வதேச அளவில் அவர்கள் நிரந்தர இடத்தைப் பிடிக்கத் தவறுகின்றனர். இருப்பினும், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆக்கிப் நபி போன்ற இளம் வீரர்கள் மட்டுமே இந்திய அணியின் பந்துவீச்சுத் துறையின் எதிர்கால நம்பிக்கையாகத் திகழ்கின்றனர் என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். ஆனால், அவர்களுக்கும் இந்திய அணியில் தொடர்ந்து இடம் கிடைக்குமா? என்ற கேள்வி உள்ளது.
