மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது .இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சூரியக்குமார் யாதவ், சஞ்சு சாம்சன், முகமது ஷமி ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
டி20 கிரிக்கெட்டில் உலகின் முதல் நிலை வீரராக சூரியகுமார் யாதவும் இருக்கிறார். எனினும் அதே பார்மை அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் வெளிப்படுத்த தடுமாறினார்.

இதனை அடுத்து சூரியகுமார் யாதவுக்கு டி20 கிரிக்கெட்டில் விளையாடும் சூழலை ஏற்படுத்தி தர அணி நிர்வாகம் யோசித்து வருவதாக ராகுல் டிராவிட்டும், ரோகித் சர்மாவும் அறிவித்திருந்தனர். அதன்படி சூரிய குமார் யாதவ் கீழ் வரிசையில் களம் இறக்க முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலம் நம்பர் 6 அல்லது 7வது இடத்தில் சூரியகுமார் விளையாடினால் அது நிச்சயம் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சூரியகுமார் யாதவும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடினார். இதனால் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூரியகுமார் யாதவுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஆறு மாதத்திற்கு மேல் விளையாடாமல் இருந்த நிலையில் தற்போது பிளேயிங் லெவனில் திரும்பி இருக்கிறார்.
இதனால் சூரிய குமார் யாதவ்க்கு தற்போது வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கிறது. மேலும் நம்பர் 6 மற்றும் ஏழாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா இருப்பதால் சூரிய குமாரின் தேவை இருக்காது என்று இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்து விட்டது. இதனால் அவரை அதிரடியாக நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு ஆல் ரவுண்டரை ஷர்துல் தாக்கூர் வடிவில் சேர்த்து இருக்கிறது.
ஹர்திக் பாண்டியா ஏற்கனவே ஆல் ரவுண்டராக இருக்கும் நிலையில், அவருக்கு பதில் சூரியகுமார் யாதவையே சேர்த்து அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தி இருக்கலாம். ஆனால் பந்துவீச்சில் சறுக்கி விட வாய்ப்பு இருக்கிறது என்பதால் சூரியகுமாரை காவு கொடுத்து விட்டு அணியின் பேலன்ஸை சரி செய்ய ரோகித் சர்மா படை முயற்சி செய்திருக்கிறது.