துபாய்: 2025 ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வியடைந்ததை அடுத்து கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாகவே இந்திய அணி அனைத்து துறைகளிலும் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், இந்த நிலைமையைப் பார்க்கவே கடினமாக இருப்பதாகவும் அந்த அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்துவீச்சு ஜாம்பவானுமான வாசிம் அக்ரம் தனது தீவிர அதிருப்தியையும், வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்றைய போட்டிக்குப் பிந்தைய தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் மனந்திறந்து பேசிய வாசிம் அக்ரம், "நான் என் மனதிலிருந்து பேசுகிறேன். பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தைப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. ஒரு முன்னாள் வீரராக, வெற்றி தோல்வி ஆட்டத்தின் ஒரு பகுதி என்பதை நான் அறிவேன். ஆனால், கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக இந்திய அணி அனைத்துத் துறைகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தி வருகிறது."

"ஒன்று அல்லது இரண்டு முறை நாம் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் இந்தியாவின் ஆதிக்கம் நம்பமுடியாத அளவிற்கு உள்ளது. அவர்களின் திறமை, அணியின் ஆழம் என அனைத்தும் சிறப்பாக உள்ளது. ஒரு போட்டியில் ஒன்று இரண்டு கேட்ச்களைத் தவறவிடுவது இயல்புதான். ஆனால், முதல் 10 ஓவர்களில் 91 ரன்கள் குவித்த பிறகு, நம்மால் 200 ரன்களைக் கூட எட்ட முடியவில்லை என்றால், அதைப் பற்றிப் பேச ஒன்றுமே இல்லை" என்று பாகிஸ்தானின் பேட்டிங் குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக, பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது நவாஸ் ஆட்டமிழந்த விதம் வாசிம் அக்ரம்-ஐ கடும் கோபத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. போட்டியின் 19-வது ஓவரில், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்-இன் சமயோசிதமான ஃபீல்டிங்கால் நவாஸ் 'ரன்-அவுட்' ஆனார். பந்து 'டெட்' ஆகிவிட்டது என நினைத்து, நவாஸ் மெதுவாக 'கிரீஸிற்குள்' நடந்து வந்து கொண்டிருந்தார்.
இதை கவனித்த சூர்யகுமார் யாதவ், வேகமாகப் பந்தை 'ஸ்டம்பை' நோக்கி எறிந்து அவரை ஆட்டமிழக்கச் செய்தார். நவாஸின் இந்த கவனக்குறைவான ஆட்டத்தைக் கண்டு வர்ணனையில் இருந்த அக்ரம், "என்ன சொல்வதென்றே தெரியவில்லை, நம்பவே முடியவில்லை" என்று தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து, 'பவர்பிளேயில்' டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக தங்களது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தாலும், அந்த அதிரடியை தொடர முடியாமல் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.