கொழும்பு : 2023 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் இலங்கை அணி 50 ரன்களில் சுருண்டது.
இலங்கை அணியின் இந்த வீழ்ச்சிக்கு முழு காரணமும் முகமது சிராஜ் தான். அவர் இலங்கை அணியின் டாப் ஆர்டர் முதல் மிடில் ஆர்டர் வரை 6 முக்கிய விக்கெட்களை சாய்த்தார். அடுத்து பாண்டியா கடைசி 3 விக்கெட்களை சாய்த்தார். பும்ரா முதல் விக்கெட்டை மட்டும் வீழ்த்தி இருந்தார்.

ரோஹித் வைத்த துவக்கப் புள்ளி : இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பான பங்களிப்பு தான் இலங்கை அணி 50 ரன்களில் ஆல்-அவுட் ஆக காரணம் என்றாலும், கேப்டன் ரோஹித் சர்மா விக்கெட் விழுந்தே ஆக வேண்டும் என நான்காவது ஓவருக்கு முன் செய்த ஒரு விஷயம் தான் சீட்டுக்கட்டு போல இலங்கை சரிவதற்கான துவக்கப் புள்ளி.
பும்ரா சொன்ன விஷயம் : முதல் ஓவரின் முதல் பந்தை பும்ரா வீசிய போதே பந்து அதிகமாக ஸ்விங் ஆகிறது என்பதை உணர்ந்து விட்டார். இலங்கை பேட்ஸ்மேன்களும் அதை உணர்ந்து இருக்க வேண்டும். ஆனால், அவர்களில் குசால் பெரேரா சுதாரிக்கவில்லை. அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் அவர் டக் அவுட் ஆனார்.
விக்கெட் இல்லையே : அடுத்த ஓவரை சிராஜ் வீசினார். பந்து ஸ்விங் ஆனதால் அந்த ஓவரை கவனமாக கையாண்ட குசால் மென்டிஸ் மெய்டன் ஓவராக ஆடினார். மூன்றாவது ஓவரில் பும்ரா பந்துவீச்சில் 1 ரன் மட்டுமே எடுத்தது இலங்கை. ரன் எடுக்காவிட்டாலும் இப்போது விட்டால் பின் ஸ்விங் குறைந்து விடும் என்பதால் விக்கெட் எடுத்தே ஆக வேண்டும் என்ற பதற்றத்தில் இருந்தார் கேப்டன் ரோஹித் சர்மா.
பீல்டிங் மாற்றிய ரோஹித் : அடுத்து நான்காவது ஓவரின் முதல் பந்தை சிராஜ் வீசும் முன் பீல்டிங்கை மாற்றினார். ஸ்கொயர் திசையில் சிறந்த பீல்டரான ஜடேஜாவை நிற்க வைத்தார். நான்காவது ஓவரை சந்திக்க வந்தது மற்றொரு துவக்க வீரர் நிசங்கா. பொதுவாக துவக்க வீரர்கள் ஸ்விங் பந்துகளை சமாளித்து ஆட பயிற்சி செய்திருப்பார்கள். அவரை வீழ்த்திவிட்டால் பின் இலங்கை எளிதாக விக்கெட்களை இழக்கும் என்பதை செயல்படுத்தவே இந்த திட்டம்.
ரோஹித்தின் பீல்டிங் திட்டப்படி பேட்ஸ்மேன் அடிக்கும் வகையில் அவுட்சைடு ஆஃப் திசையில் பந்தை வீசினார் சிராஜ். அதை அடிக்க நினைத்த நிசங்கா, எதிர்பார்த்தது போல ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்தார்.
சரிந்த விக்கெட்கள் : அதைத் தொடர்ந்து இலங்கை வீரர்கள் சிராஜ் வீசிய அவுட் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ஒவ்வொருவராக வெளியேறினர். சிராஜ் 7 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களை சாய்த்தார். பாண்டியா 2.2 ஓவர்களில் 3 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் சாய்த்தார். பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினார்.
இலங்கை பரிதாபம் : இலங்கை அணி பரிதாபமாக 15.2 ஓவரில் 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஏற்கனவே, காயம் மற்றும் பல்வேறு காரணங்களால் சரியான வீரர்கள் இல்லாமல் தவிக்கும் இலங்கை அணிக்கு இந்திய அணி மரண அடி கொடுத்துள்ளது.