அவ்ளோதான் உங்களுக்கு.. ஓரங்கட்டப்பட்ட ஷமி.. உலகக்கோப்பையிலும் இதே தான்.. ரோஹித் எடுத்த பகீர் முடிவு!
கொழும்பு : 2023 ஆசிய கோப்பை தொடரில் முகமது ஷமி இந்திய அணியில் மாற்று பந்துவீச்சாளர் என்ற அளவிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறார்.
முக்கியமான பந்து வீச்சாளரான அவர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவருக்கு அணியில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ரிவர்ஸ் ஸ்விங் திறமை : இத்தனைக்கும் அவரைப் போல எந்த சூழ்நிலையிலும் ரிவர்ஸ் ஸ்விங் வீச மற்ற இந்திய பந்துவீச்சாளர்களால் முடியவில்லை. அதுமட்டுமல்ல ரன்களை கட்டுப்படுத்துவதில் ஷமி சிறந்து விளங்குகிறார். ஆனாலும், அவருக்கு அணியில் முன்னணி பந்துவீச்சாளர் என்ற அடையாளம் கிடைக்கவில்லை. ஏன் கேப்டன் ரோஹித் சர்மா அவரை புறக்கணிக்கிறார்? உலகக்கோப்பையில் ஷமியின் நிலை என்ன?
பும்ரா - ஷமி : இந்திய அணி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் நீண்ட காலம் கழித்து சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களை அடையாளம் கண்டது. அவர்களில் முதல் இரண்டு இடங்களில் இருந்தவர்கள் பும்ரா மற்றும் முகமது ஷமி. அவர்கள் இருவரையும் வைத்து இந்திய அணி பல பலமான அணிகளைக் கூட அச்சுறுத்தி இருக்கிறது.
உள்ளே வந்த சிராஜ் : அப்போது அவர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு இணையாக பந்து வீசக் கூடிய மாற்று வேகப் பந்துவீச்சாளர் ஒருவர் வேண்டும் என தேடிய போது கிடைத்தவர் தான் முகமது சிராஜ். துவக்கத்தில் அவர் ரன்களை அள்ளிக் கொடுத்தார். ஆனால், விக்கெட் வீழ்த்துவதில் சிறந்து விளங்கினார். நாளடைவில் அவரது பந்துவீச்சு மெருகேறியது. இப்போது அவர் சில போட்டிகளில் மட்டுமே ரன்களை அதிகமாக கொடுக்கிறார். மற்றபடி நம்பகமான வீரராக மாறி இருக்கிறார்.
விக்கெட் வேண்டும் : சிராஜின் வளர்ச்சி ஷமிக்கு பாதகமாக மாறி இருக்கிறது. ஷமி கட்டுக் கோப்பாக பந்துவீசினாலும் கேப்டனுக்கு அவசியமான நேரத்தில் விக்கெட் எடுத்துக் கொடுப்பதில் சிராஜ், பும்ரா அளவுக்கு இல்லை என்ற ஒரு எண்ணம் காரணமாக அவரை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். பும்ரா அல்லது சிராஜ் இல்லை என்றால் மட்டுமே அவருக்கு அணியில் இடம் என்ற நிலை உள்ளது.
ஆசிய கோப்பை இறுதி : ஆனால், அனுபவம் வாய்ந்த ஷமிக்கு முக்கியமான போட்டியான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வாய்ப்பு அளிப்பார் கேப்டன் ரோஹித் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதிலும் அவரை களமிறக்கவில்லை. இதன் மூலம் ஷமியின் இடம் இனி மாற்று வீரர் என்பது தான் என வெட்டவெளிச்சமாகி உள்ளது.
உலகக்கோப்பையிலும் இதேதான் : சிலர் ஷமிக்கு காயம் ஏற்படும் என்ற அச்சத்தால், உலகக்கோப்பை தொடருக்காக அவர் பாதுகாக்கப்படுகிறார் என கூறுகிறார்கள். ஆனால், ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கே அவர் தேவையில்லை என கேப்டன் நினைக்கிறார் என்றால் உலகக்கோப்பை தொடரிலும் அவர் பும்ரா, சிராஜ்-க்கு மாற்று வீரர் என்ற நிலையிலேயே தான் இருப்பார்.


Click it and Unblock the Notifications