அடுத்தடுத்து இரு மோதல்.. அனல் பறக்கப்போகும் இந்தியா-பாகிஸ்தான் டி20
மும்பை: பரம வைரி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியோடு அடுத்த இரு மாதங்களில் இரு டி20 போட்டிகளில் மோத உள்ளது இந்தியா என்பதால் ரசிகர்கள் படு ஆர்வமாக போட்டிகளை காண தயாராகி வருகிறார்கள்.
இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான வெளியுறவு பிரச்சினைகளால், கிரிக்கெட் தொடருக்கு இந்திய அரசு அனுமதி தராததால் பல வருடங்களாக இரு அணிகளும் மோதும் போட்டிகள் குறைந்துவிட்டன. ஐசிசி கோப்பைகளுக்கான ஆட்டங்களில் அரிதாக இவ்விரு அணிகளும் சந்தித்துக்கொண்டதோடு சரி.
இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தி அடுத்த இரு மாதங்களிலும் காத்திருக்கிறது. ஆம்.. வங்கதேசத்தில் அடுத்த மாதம், 24ம் தேதி தொடங்கி, மார்ச் மாதம் 6ம் தேதிவரை, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

டி20 போட்டிகள்
இந்த கிரிக்கெட் தொடரில், இந்தியா, பாகிஸ்தான் உட்பட 5 ஆசிய கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. 50 ஓவர் போட்டிகளாக இதுவரை நடைபெற்று வந்த ஆசிய கோப்பை தொடர், முதல் முறையாக இம்முறை, டி20 போட்டியாக நடைபெற உள்ளது.

பிப்ரவரி 27
இந்த டி20 தொடரின், லீக் ஆட்டத்தில், பிப்ரவரி 27ம் தேதி சனிக்கிழமை பாகிஸ்தானுடன் இந்தியா மோதுகிறது. இரு அணிகளும் பைனலுக்கு சென்றால் மீண்டும் மோதும் வாய்ப்பு இருப்பதையும் மறுக்க முடியாது.

உலக கோப்பை மோதல்
இதையடுத்து, உலக கோப்பை டி20 போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் லீக் ஆட்டத்தில், மார்ச் 19ம் தேதி தர்மசலா ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

5 அணிகள்
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள், ஆசிய கோப்பையில் ஆட தகுதி பெற்றுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான், ஓமன், ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நான்கு அணிகளில் ஒன்று, தகுதி போட்டிகள் அடிப்படையில், 5வது அணியாக இத்தொடரில் ஆடும்.


Click it and Unblock the Notifications