AUS vs PAK: அடி பின்னிட்டாரு.. பிறந்தநாளில் ரசிகர்களுக்கு பரிசு.. ஆஸ்திரேலிய வீரரின் ருத்ர தாண்டவம்!
: ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான மிட்செல் மார்ஷ், தனது பிறந்த நாளன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபார சதம் விளாசி கொண்டாடியுள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் 18வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் ஆஸ்திரேலிய அணி தரப்பில் டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

முதல் 7 ஓவர்களில் நிதானம் காத்த இருவரும், ஹாரிஸ் ராஃப் வீசிய 8வது ஓவரில் அட்டாக்கை தொடங்கினார்கள். குறிப்பாக ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் மட்டும் 3 பவுண்டரிகளை விளாசினார். அதன்பின்னர் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகளை விளாசிய மிட்செல் மார்ஷ், 40 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷின் அதிரடி அடுத்த கட்டத்திற்கு சென்றது. குறிப்பாக உசாமா மிர் பந்துவீச்சை தேடி தேடி சிக்சர் அடித்து அசத்தினார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 21 ஓவர்கள் முடிவில் 158 ரன்களாக இருந்தது. இருப்பினும் பாகிஸ்தான் அணியின் ஸ்பின்னர்கள் மிட்செல் மார்ஷை கொஞ்சம் திணற வைத்தனர்.
ஆனால் பாகிஸ்தான் அணியின் ஒரு கட்டத்தை வேகப்பந்துவீச்சாளர்களை மீண்டும் அட்டாக்கில் கொண்டு வந்த பின், உடனடியாக சிக்சர் அடித்து அசத்தினார். இதனால் 30வது ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணி 200 ரன்களை கடந்தது. அதன்பின் டேவிட் வார்னர் ஒரு பக்கம் சதம் அடிக்க, அடுத்த பந்திலேயே சதம் விளாசி மிட்செல் மார்ஷ் அசத்தினார்.
32வது பிறந்தநாளை கொண்டாடும் மிட்செல் மார்ஷ், பிறந்தநாளன்று சதம் விளாசி ரசிகர்களுக்கு பரிசளித்துள்ளார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் பிறந்தநாளன்று சதம் விளாசும் முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் மிட்செல் மார்ஷ் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மிட்செல் மார்ஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிறப்பாக ஆடிய அவர், 108 பந்துகளுக்கு 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


Click it and Unblock the Notifications