ஒருவழியாக ஆல் அவுட் செய்த இந்தியா.. 108 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்த ஆஸி.. சிராஜ் செய்த சம்பவம்!
லண்டன்: இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்திருந்தது. இதனால் இரண்டாம் நாளில் ஆஸி. அணியை வேகமாக ஆல் அவுட் வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் முதல் ஓவரிலேயே பவுண்டரியை விளாசி ஆஸி. அணியின் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசி அசத்தினார். இன்னொரு பக்கம் டிராவிஸ் ஹெட் 150 ரன்களை கடந்தார். இந்த நிலையில் டிராவிஸ் ஹெட்டிற்கு பவுன்சர் திட்டத்துடன் இந்திய அணி அட்டாக் செய்தது.

இதன் காரணமாக சிராஜ் பந்துவீச்சில் கேஎஸ் பரத்திடம் கேட்ச் கொடுத்து டிராவிஸ் ஹெட் 163 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் காரணமாக இந்திய அணி முகாமில் உற்சாகம் ஏற்பட்டது. இதையடுத்து வந்த கேமரூன் க்ரீன் ஷமியின் பந்துவீச்சில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஷர்துல் தாக்கூர் பந்தில் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்கள் எடுத்து போல்டானார். தொடர்ந்து மிட்செல் ஸ்ட்ராக் ரன் அவுட்டாகி வெளியேற, உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 422 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் உணவு இடைவேளைக்கு பின் அலெக்ஸ் கேரி அதிரடியாக ஆடி ரன்கள் குவிக்க, அவருக்கு ஸ்பின்னரான ஜடேஜாவை கொண்டு வந்து ரோகித் சர்மா அட்டாக் செய்தார். ஜடேஜா வீசிய முதல் ஓவரிலேயே கேரி 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி 2 விக்கெட்டுகளை வீழ்த்த சிராஜ் அட்டாக்கில் வந்தார். அதற்கேற்ப லயனை 9 ரன்களிலும், கம்மின்ஸை 9 ரன்களிலும் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உமேஷ் யாதவுக்கு எந்த விக்கெட்டும் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியா அணி இரண்டாவது நாளில் 108 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஓவல் மைதானத்தில் 2வது நாளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தப்படும் என்று வரலாறு இருக்கும் சூழலில், இந்திய வீரர்கள் விக்கெட் கொடுக்காமல் பேட்டிங் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications