140 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு.. ஆஸி.யின் மோசமான ரெக்கார்ட்ஸ்.. இந்தியாவுக்கு சாதகமா
லண்டன் : ஐபிஎல் முடிவடைந்த நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஏழாம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிக்கான உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் இந்த போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.
கடந்த முறை ஏற்கனவே நியூசிலாந்துடன் இந்திய அணி தோல்வியைத் தழுவிய நிலையில் செய்த தவறை திருத்திக் கொள்ள மீண்டும் தற்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இங்கிலாந்தின் தெற்கு லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தான் இந்த போட்டி நடைபெறுகிறது.

இதற்காக லண்டன் ஓவல் மைதானம் தயார் படுத்தும் பணியில் ஐசிசி நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த மைதானத்தில் தான் முதல் முறையாக 1880 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி நடைபெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியா அணி இந்த மைதானத்தில் 38 டெஸ்ட்டில் விளையாடி இருக்கிறது. இதில் அவர்கள் வெறும் ஏழு போட்டிகள் மட்டுமே வென்றிருக்கிறார்கள்.
அவர்களுடைய வெற்றி சராசரி 18.42 என்ற அளவில் லண்டன் ஓவலில் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கடந்த 50 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை தான் டெஸ்ட் போட்டியில் வென்றிருக்கிறது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு ஓவல் மைதானம் எப்போதும் பிரச்சினை கொடுக்கும் மைதானமாகவே கருதப்படுகிறது. இந்தியாவுக்கும் ஓவல் மைதானம் பெரிய அளவில் ராசியாக அமைந்தது இல்லை.
இங்கு இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் தோல்வி ஏழு ஆட்டங்களில் சமன் ஆகியவற்றை பெற்றிருக்கிறது. இந்திய அணி கடைசியாக 2021 ஆம் ஆண்டு லண்டன் ஓவல் மைதானத்தில் விளையாடியது. இதில் 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு முதல் வெற்றியினை இந்தியா பதிவு செய்தது. தற்போது ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கேண்ட் மைதானத்தில் பயிற்சி செய்து வருகிறார்கள். போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஓவல் மைதானத்திற்கு இரு அணி வீரர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.


Click it and Unblock the Notifications