உலக டெஸ்ட் பைனலில் இந்தியா தோல்வி.. சாம்பியன் பட்டம் வென்ற ஆஸி.. 10 ஆண்டுக்கால சோகம் தொடர்கிறது
லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றது.
லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. முதல் இன்னிங்சில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் ஆகியோர் அபார சதம் அடித்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்சில் களமறங்கிய இந்திய அணியில் டாப் வரிசை விரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ரஹானே 89 ரன்களில் வெளியேறினார். ஷர்துல் தாக்கூர் 51 ரன்கள் எடுக்க, இந்திய அணி 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
173 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 270 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் 161 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 5வது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது.
இந்திய அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 49 ரன்களில் வெளியேற, அதே ஓவரில் ஜடேஜாவும் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ரஹானே மட்டும் தனி ஆளாக நின்று போராடிய நிலையில், அவரும் 46 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். கேஎஸ் பரத் 23 ரன்களும், ஷமி 13 ரன்களும் இறுதியில் சேர்க்க, இந்திய அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல் முறையாக வென்றது. மேலும், அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் அணி என்ற பெருமையையும் ஆஸ்திரேலியா பெற்றது. இதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து 2 முறை இறுதிப் போட்டியில் வந்து தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை இந்திய அணி வெல்லாத சோகம் மீண்டும் தொடர்கிறது.


Click it and Unblock the Notifications