இது 8வது முறை.. சொல்லி வைத்து விக்கெட் வீழ்த்திய ஜடேஜா.. அவசரப்பட்டு ஆட்டமிழந்த ஸ்டீவ் ஸ்மித்!
லண்டன்: ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை 8வது முறையாக வீழ்த்தி இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அசத்தியுள்ளார். இதனால் இந்திய ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸ் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களை குவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணி ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூரின் அபாரமான போராட்டத்தால் 296 ரன்கள் சேர்த்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான வார்னர் 1, கவாஜா 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேனான லபுஷேன் மற்றும் முதல் இன்னிங்ஸில் அதிரடி சதம் விளாசிய ஸ்டீவ் ஸ்மித் இருவரும் இணைந்தனர். இவர்கள் இருவரையும் வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணி இலக்கு எவ்வளவு என்று சிந்திக்கவே முடியும் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் இவர்கள் இருவரும் எளிதாக ரன்கள் சேர்க்க தொடங்கினர். இதனால் ஆஸ்திரேலிய அணியின் முன்னில் 250 ரன்களை கடந்து சென்றது. இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா ஜடேஜாவை அட்டாக்கில் கொண்டு வந்தார். ஏனென்றால் ஜடேஜாவின் பந்துவீச்சிற்கு ஸ்டீவ் ஸ்மித் ஏற்கனவே பலமுறை ஆட்டமிழந்திருக்கிறார். இதனால் ஜடேஜாவை ஆதிக்கம் செலுத்த நினைத்த ஸ்டீவ் ஸ்மித், ஒவ்வொரு ஓவரிலும் முதல் பந்திலேயே டவுன் தி டிராக் இறங்கி வந்து ஆடினார்.
இந்த நிலையில் 31வது ஓவரின் முதல் பந்தை ஜடேஜா வெளியில் டர்ன் செய்ய, அதனை இறங்கி வந்து ஸ்டீவ் ஸ்மித் ஆட முயன்றார். ஆனால் அந்த பந்து எட்ஜாகி ஷர்துல் தாக்கூர் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. இதனால் ஸ்டீவ் ஸ்மித் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் ஸ்டீவ் ஸ்மித்தை 8வது முறையாக ஜடேஜா வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித்தை இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் 9 முறை வீழ்த்தியுள்ளார். இவருக்கு பின் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் ஸ்டீவ் ஸ்மித்தை 8 முறை வீழ்த்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications