கோலி, கம்பீருக்கு பின் மெகா சாதனை படைத்த ஆயுஷ் பதோனி.. அடுத்தடுத்து இரட்டை சதம் விளாசல்
டெல்லி: 2026 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், டெல்லி அணியின் கேப்டன் ஆயுஷ் பதோனி அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்களை விளாசி புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு இன்னிங்ஸ்களில் இரட்டை சதம் அடித்த உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார். மேலும், டெல்லி கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் இடம்பெற்றுள்ள சாதனைப் பட்டியலிலும் ஆயுஷ் பதோனி இணைந்து பெருமை சேர்த்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை 3-வது சுற்று ஆட்டத்தில், டெல்லி அணியை வழிநடத்திய ஆயுஷ் பதோனி எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 216 பந்துகளிலேயே 28 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் தனது தொடர்ச்சியான 2-வது இரட்டை சதத்தை எட்டினார். இதற்கு முன்பாக கடந்த வாரம் குஜராத் அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்திலும் அவர் 217 ரன்கள் குவித்து மலைக்க வைத்திருந்தார்.

முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் இரட்டை சதம் அடித்த 21-வது இந்திய வீரர் என்ற பெருமையை பதோனி பெற்றுள்ளார். ரஞ்சி கோப்பை என்ற பெயருக்கு காரணமான இந்தியாவின் முதல் சர்வதேச கிரிக்கெட் வீரரான கே.எஸ். ரஞ்சித்சிங்ஜி முதன்முதலில் 1900 மற்றும் 1901-ல் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். டெல்லி கிரிக்கெட்டில் கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு அடுத்தபடியாக இந்த மைல்கல்லை எட்டிய 3-வது பேட்டர் என்ற பெருமையையும் பதோனி தட்டிச் சென்றுள்ளார். உலக வரலாற்றிலேயே எந்தவொரு பேட்டரும் இரண்டு முறைக்கு மேல் தொடர்ச்சியாக இரட்டை சதம் அடித்ததில்லை என்பதால், அவர் உலக சாதனையை சமன் செய்ததாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் அரங்கில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் கௌதம் கம்பீரின் வழிகாட்டுதலில் கவனம் பெற்ற ஆயுஷ் பதோனி, தற்போது டெல்லி ரஞ்சி அணியின் கேப்டனாக முன்னின்று ரன் வேட்டை நடத்தி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் காட்டி வரும் இந்த அசாத்திய ஃபார்ம், இந்திய டெஸ்ட் அணியிலும் வாய்ப்புகளை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

