கோலி, பும்ராவுக்கு கூட இடமில்லை.. உலக டி20 லெவனில் பாபர் அசாம் சேட்டை.. தனக்கே இடமளிக்கவில்லை
மும்பை: உலகின் சிறந்த டி20 வீரர்கள் அடங்கிய உலக லெவன் அணியை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தேர்வு செய்துள்ளார். அதில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற உலகின் சிறந்த வீரர்களை அவர் தேர்வு செய்யவில்லை. அதே சமயம், இந்தியாவிலிருந்து ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரைத் தனது அணியில் தேர்வு செய்திருக்கிறார். இதை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
பாபர் அசாம் தேர்வு செய்துள்ள இந்த உலக டி20 லெவன் அணியில், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய ஐந்து அணிகளைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே இடம் பிடித்திருக்கின்றனர். டி20 போட்டிகளில் விராட் கோலி மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்து வரும் நிலையில், அந்த இடத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஜமாலுக்கு இடம் அளித்திருக்கிறார் பாபர் அசாம்.

மேலும், துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் முகமது ரிஸ்வானை அவர் தேர்வு செய்திருக்கிறார். டி20 போட்டிகளில் ரோகித் சர்மா 4231 ரன்களும், முகமது ரிஸ்வான் 3414 ரன்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், விராட் கோலி 4188 ரன்கள் எடுத்து இருக்கிறார். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
இதில் மற்றொரு சிறப்பான சம்பவத்தையும் செய்திருக்கிறார் பாபர் அசாம். அவருக்கு அவரே இடம் அளிக்கவில்லை. எனினும், பாபர் அசாம் 4223 ரன்கள் எடுத்து தற்போது உலகின் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
அடுத்து, நான்காம் வரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் இடம் பிடித்திருக்கிறார். அவர் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக அறியப்படும் நிலையில், அவருக்கு இடம் அளித்திருக்கிறார். அடுத்து, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜோஸ் பட்லர் இடம் பிடித்திருக்கிறார். ஃபினிஷராகத் தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் இடம் பிடித்திருக்கிறார்.
ஆல்ரவுண்டராக மார்க்கோ யான்சனுக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. சுழற்பந்துவீச்சாளராக ஆப்கானிஸ்தானின் ரஷித் கானுக்கு இடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களான பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இடம் பிடித்திருக்கின்றனர். மற்றொரு வேகப்பந்துவீச்சாளராக இங்கிலாந்தின் மார்க் வுட்டுக்கு இடம் அளித்து இருக்கிறார்.
பாபர் அசாமின் உலக டி20 XI: ரோஹித் சர்மா, முகமது ரிஸ்வான், ஃபாக்கர் ஜமான், சூர்யகுமார் யாதவ், ஜோஸ் பட்லர், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ரஷித் கான், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், மற்றும் மார்க் வுட்.


Click it and Unblock the Notifications