தாகா: வங்கதேச கிரிக்கெட்டின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம், புதன்கிழமை (நவம்பர் 19) தனது கிரிக்கெட் வாழ்வில் மாபெரும் மைல்கல்லை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அயர்லாந்துக்கு எதிராக மிர்பூரில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்கியபோது, 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வங்கதேச வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
கடந்த 2005-ம் ஆண்டு, மே மாதம், லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராகத் தனது டெஸ்ட் பயணத்தைத் தொடங்கிய முஷ்பிகுர் ரஹீம், கடந்த 20 ஆண்டுகளாக வங்கதேச அணியின் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்து வருகிறார். 38 வயதான இந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், தனது 100-வது போட்டிக்கு முன்பு வரை, 38.02 என்ற சராசரியுடன் 6,351 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 12 சதங்களும், 27 அரைசதங்களும் அடங்கும்.

அவரது கிரிக்கெட் வாழ்வின் உச்சமாக, 2018-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம் பார்க்கப்படுகிறது. அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 219* ரன்கள் (421 பந்துகள்) குவித்து, வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 218 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.
ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், 2011 முதல் 2017 வரை 34 டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணியை வழிநடத்தியுள்ளார். அதில், 7 வெற்றிகள், 18 தோல்விகள் மற்றும் 9 டிராக்களைப் பதிவு செய்துள்ளார். தற்போது விக்கெட் கீப்பிங் செய்வதை அவர் குறைத்துக்கொண்டாலும், தனது டெஸ்ட் வாழ்வில் 99 இன்னிங்ஸ்களில் விக்கெட் கீப்பிங் செய்து 113 விக்கெட் வீழ்ச்சிகளுக்குக் காரணமாக இருந்துள்ளார். இதில் 98 கேட்சுகளும், 15 ஸ்டம்பிங்குகளும் அடங்கும்.
இந்த 100-வது போட்டியின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய 8-வது விக்கெட் கீப்பர் என்ற பிரத்யேக பட்டியலில் முஷ்பிகுர் ரஹீம் இணைந்துள்ளார். இந்திய ஜாம்பவான் எம்.எஸ். தோனி (90 டெஸ்ட்கள்) மற்றும் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் (96 டெஸ்ட்கள்) போன்றோரால் கூட இந்த மைல்கல்லை எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"ருதுராஜ் வெறும் காகித கேப்டன்.. உண்மையான கேப்டனே இவர்தான்" தோனி பற்றி சர்ச்சையை கிளப்பிய கைஃப்
அயர்லாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஒருமுறை மட்டுமே பேட்டிங் செய்த ரஹீம், 23 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது தனது 100-வது டெஸ்டில் களமிறங்கியுள்ள நிலையில், இந்தப் போட்டியில் அவர் சதம் அடிக்கும் பட்சத்தில், தனது 100-வது டெஸ்டில் சதம் அடித்த 12-வது வீரர் என்ற மற்றொரு அரிய சாதனையையும் படைக்க அவருக்கு வாய்ப்புள்ளது.