டாக்கா: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வர பிரசாதமாக இருந்தாலும் மற்ற நாடுகளுக்கு அது கெடுதலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்களது நாட்டிற்கு விளையாடாமல் தொடர்ந்து ஐபிஎல் போன்ற போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தரம் குறைந்து தற்போது உலககோப்பை தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்று ஒவ்வொரு நாட்டில் உள்ள நட்சத்திர வீரர்களும் பணத்திற்காக விலகி வருவதால் சர்வதேச கிரிக்கெட்டை ஆட்டம் கண்டு வருகிறது.

தென்னாப்பிரிக்காவும் அதே வழியில் தான் செல்கிறது. இந்த நிலையில் வங்கதேசமும் அந்த வழியில் செல்வதை தடுக்கும் விதமாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வங்கதேச அணி கடந்த ஐபிஎல் தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது.
இதன் காரணமாக வங்கதேச வீரர்கள் டஸ்கின் அகமது, சகிபுல் ஹசன் லிட்டன் தாஸ் ஆகியோருக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் ஐபிஎல் தொடரை தியாகம் செய்ததற்கு சன்மானம் வழங்கும் விதமாக மூன்று வீரர்களுக்கும் பரிசு தொகையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி மூன்று வீரர்களுக்கும் சேர்த்து 54 லட்சம் ரூபாயை பரிசாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் கொடுத்திருக்கிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியம், நிச்சயமாக ஐபிஎல் தொடரில் கிடைக்கும் பணத்தை எங்களால் வீரர்களுக்கு வழங்க முடியாது. இருப்பினும் இது போன்ற பரிசை அவர்கள் பெறுவதற்கு தகுதியான நபர்கள். அவர்களுடைய தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாகத்தான் நாங்கள் இந்த செயலை செய்தோம். அவர்கள் ஐபிஎல் தொடரை விட்டு நாட்டுக்காக விளையாடினார்கள் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறி இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் போதிய சம்பளம் இல்லை என்பதற்காக வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்கள். இதுபோன்று ஐபிஎல் தொடரில் இருந்து விலகினால் வீரர்களுக்கு கூடுதல் பணம் தருகிறோம் என்று ஏதேனும் கிரிக்கெட் வாரியம் செய்தால் வீரர்களும் தொடர்ந்து நாட்டுக்காக விளையாடுவார்கள். இந்த திட்டத்தை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும். ஆனால் இவ்வாறு சம்பளம் வழங்க போதிய பணம் ஒவ்வொரு நாட்டிடமும் இல்லை. இதனால் ஐசிசி மற்றும் நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு கூடுதல் பணம் தர வேண்டும் என்பதை கிரிக்கெட் வல்லுநர்களின் கோரிக்கையாகும்.