டி20 உலக கோப்பை தகுதிச் சுற்று: வங்கதேசம்-அயர்லாந்து ஆட்டம் மழையால் பாதிப்பு
தரம்சலா: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்றில் வங்கதேசம்-அயர்லாந்து இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது 8 அணிகள் இடையிலான முதலாவது சுற்று நடந்து வருகிறது. இதில் தர்மசாலாவில் நேற்றிரவு நடந்த 'ஏ' பிரிவு லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-அயர்லாந்து அணிகள் மோதின.

மழையின் குறுக்கீட்டால் ஒன்றரை மணி நேரம் தாமதமாக தொடங்கியதால் ஆட்டம் 12 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் போர்ட்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் களம் இறங்கிய வங்க தேச வீரர்கள் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சவும்யா சர்கார் 13 பந்தில் 20 ரன்னும், தமிம் இக்பால் 47 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து 8 ஓவர்களில் வங்காளதேச அணி 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் மேற்கொண்டு ஆட்டத்தை நடத்த முடியவில்லை.
இதனால் இந்த ஆட்டம் பாதியில் ரத்தானது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வீதம் பகிர்ந்து வழங்கப்பட்டது. ஏற்கனவே தனது முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ள அயர்லாந்து அணி, இந்த ஆட்டத்தில் முடிவு இல்லாததால் சூப்பர்-10 சுற்று வாய்ப்பை பரிதாபமாக பறிகொடுத்தது.
பிற்பகலில் இருந்து பெய்த மழையால் ஓமன், நெதர்லாந்து ஆட்டம் ரத்தான நிலையில் இந்த ஆட்டத்திற்கும் மழை பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த பிரிவில் வங்காளதேசம், ஓமன் அணிகள் தலா 3 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளன. நாளை இவ்விரு அணிகள் இடையே நடைபெறும் கடைசி லீக்கில் வெற்றி பெறும் அணி 'ஏ' பிரிவில் இருந்து சூப்பர்-10 சுற்றுக்குள் முன்னேறும்.


Click it and Unblock the Notifications