லாகூர்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணியின் மிராஸ் மற்றும் ஷாண்டோவின் அபார சதத்தால் அந்த அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 334 ரன்கள் குவித்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் 4வது போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. வங்கதேச அணி தனது முதல் போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வியடைந்ததால், இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து வங்கதேச அணி தரப்பில் முகமது நைம் - மெஹதி ஹசன் மிராஸ் இருவரும் தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், முகமது நைம் 28 ரன்களில் எடுத்து முஜீப் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஹிருடாஸ் டக் அவுட்டாகி வெளியேற, வங்கதேச அணி 63 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் - ஷாண்டோ கூட்டணி இணைந்தது.
நிதானமாக ஆடிய இருவரும் வங்கதேச அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஒரு கட்டத்தில் இருவருமே அரைசதம் விளாச, ஆட்டத்தில் வங்கதேச அணியின் கைகள் ஓங்கியது. சிறப்பாக ஆடிய மெஹதி ஹசன் மிராஸ் சதம் விளாசி அசத்தினார். இன்னொரு பக்கம் ஷாண்டோவும் 101 பந்துகளில் சதம் விளாச, வங்கதேச அணியின் ஸ்கோர் 43 ஓவர்கள் முடிவில் 262 ரன்கள் சேர்த்தது.
இந்த நிலையில் காயம் காரணமாக மெஹதி ஹசன் மிராஸ் 112 ரன்கள் எடுத்து ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேற, இன்னொரு பக்கம் ஷாண்டோ 104 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு இவர்களின் பார்ட்னர்ஷிப் 194 ரன்களாக அமைந்தது. பின்னர் வந்த ரஹிம் 15 பந்துகளிலும் 25 ரன்களும், ஹொசைன் 6 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தனர். சிறப்பாக ஆடிய கேப்டன் ஷகிப் அல் ஹசன் 18 பந்துகளில் 32 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார்.
இதன் மூலம் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 334 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப் மற்றும் குல்புதின் நைப் இருவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். வாழ்வா சாவா போட்டியில் வங்கதேச அணி சிறந்த இலக்கை நிர்ணயித்திருந்தாலும், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் ஆஃப்கானிஸ்தான் அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.