மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் களமிறங்க இன்னும் அதிக காலம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த இந்திய அணியின் வங்கதேச சுற்றுப்பயணம், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் மற்றும் கோலி, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும் என்ற சூழல் உள்ளது. இந்த ஒத்திவைப்பு அவர்களின் போட்டிப் பயிற்சியை சற்றே பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, 2025 ஆசிய கோப்பை தொடர் டி20 தொடராக நடைபெறுவதால் விராட் கோலி, ரோஹித் சர்மாவால் விளையாட முடியாத நிலை உள்ளது.

ஆகஸ்ட் மாதம் இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் அங்கு நிலவும் அரசியல் சூழல் காரணமாக இந்திய அணி அங்கு செல்ல வாய்ப்பு இல்லை என பிசிசிஐ, வங்கதேச கிரிக்கெட் அமைப்பிடம் கூறி விட்டதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமோ (BCCI) அல்லது வங்கதேச கிரிக்கெட் வாரியமோ (BCB) இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எனினும், இந்த தொடரின் ஒளிபரப்பு உரிமைகள் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடக்காது என்பதற்கான தெளிவான அறிகுறியாக உரிமை விற்பனை நிறுத்தம் பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. உரிமைகளுக்கான தொழில்நுட்ப ஏலம் ஜூலை 7-ம் தேதியும், நிதி ஏலம் ஜூலை 10-ம் தேதியும் நடைபெறவிருந்தது, ஆனால் அவை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. மாறாக, ஜூலை மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசத்தில் நடைபெறவுள்ள டி20 தொடரின் ஒளிபரப்பு உரிமைகளை விற்க வங்கதேச வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.
இந்திய ஒளிபரப்பாளர் ஒருவர், "இந்தியா தொடர் இல்லை என்று அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர். டெண்டரை அறிவித்த பிறகு, அவர்கள் ITT-ஐ வழங்கவில்லை. தற்போது, பாகிஸ்தான் தொடருக்கு மட்டுமே விற்பனை செய்கிறார்கள்," என்று தெரிவித்தார்.
பிசிசிஐ ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் செல்வது கடினம் என்று பிசிபி-யிடம் தெரிவித்ததாகவும், சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு குறித்து இரு வாரியங்களும் விரைவில் கூட்டறிக்கை வெளியிடலாம் என்றும் பிசிபி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், 2025 ஆசியக்கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மோசமடைந்ததால், இப்போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவியது. இருப்பினும், செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 21-ம் தேதி வரை நடைபெறும்.
இந்த தொடரில், இந்தியா-பாகிஸ்தான் மோதல் செப்டம்பர் 7-ம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற வாய்ப்புள்ளதுடன், பிசிசிஐ தொடரை நடத்தும் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளும்என எதிர்பார்க்கப்படுகிறது.