இலங்கை நடத்தும் போட்டி ஐபிஎல் போட்டிகளில் ஆட இந்திய வீரர்களுக்குத் தடை

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் பிரபலமாக திகழ்கின்றன. இப்போட்டிகளில் பங்கேற்க சர்வதேச அளவில் புகழ் பெற்ற வீரர்கள் முட்டி மோதுகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டித் தொடரில் பங்கேற்ற இலங்கை வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் திடீரென உத்தரவு போட்டதால் இலங்கை வீரர்கள் அதிருப்தி அடைந்தனர். ஐபிஎல் போட்டிகளி்ல ஆடினால் நல்ல துட்டு கிடைக்கும் என்பதால் அதிலிரு்நது விலகி வர அவர்களுக்கு மனமில்லை. இருப்பினும் கிரிக்கெட் வாரியத்தின் முரண்டால் அவர்கள் கிளம்பிச் செல்ல நேரிட்டது.
ஐபிஎல் போட்டிகள் முடிந்த நிலையில் இலங்கை திரும்பிய வீரர்கள் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்திடம் சரியான அடி வாங்கி வருகின்றனர்.
ஐபிஎல் போட்டிகளிலிருந்து இலங்கை வீரர்களை விடுவிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி தெரிவித்ததால் கடுப்பான இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐபிஎல்லுக்குப் போட்டியாக இலங்கை பிரீமியர் லீக் என்ற தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் பலர் இணைந்துள்ளனர். இந்திய வீரர்கள் பலரும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் அதற்கு முட்டுக்கட்டைப் போட்டு விட்டது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங்க் மனோகர் கூறுகையில், இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்தவில்லை. மாறாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு தனி நபர் இதை நடத்தவுள்ளார். எனவே அதிகாரப்பூர்வமற்ற இந்தப் போட்டியில் இந்திய வீரர்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.தனியார்கள் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் நமது வீரர்களை அனுப்புவதில்லை என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கொள்கை முடிவாகும்.
எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதித்தால் மட்டுமே இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க முடியும். இல்லாவிட்டால் பங்கேற்க முடியாது. எங்களது முடிவை ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்குத் தெரியப்படுத்தி விட்டோம் என்றார் அவர்.
இலங்கை பிரீமியர்லீக் போட்டிகள் ஜூலை 19ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்திய வீரர்கள் பிரவீன் குமார், முனாப் படேல், அஸ்வின் ஆகியோர் இத்தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தனர். தற்போது அவர்களுக்கு கிரிக்கெட் வாரியம் தடை போட்டு விட்டது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:47 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications