மும்பை: ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மீதும், அவரது பேட்டிங் ஃபார்ம் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்து இருக்கின்றன. அவரை கேப்டன் பதவியில் இருந்து பிசிசிஐ நீக்குமா? என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில், மும்பையில் நேற்று முன்தினம் பிசிசிஐ அதிகாரிகளை ரோஹித் சர்மா சந்தித்து இருந்தார்.
அப்போது தான் சில மாதங்களுக்கு கேப்டனாக தொடர விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார் ரோஹித் சர்மா. மேலும், அடுத்த கேப்டனை அடையாளம் காணும் வரை தான் கேப்டனாக தொடர விரும்புவதாகவும் தெரிவித்து இருக்கிறார். புதிதாக யார் கேப்டனாக நியமிக்கபட்டாலும் அவருக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பதாகவும் உறுதி அளித்து இருக்கிறார்.

சமீபத்தில் இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் தோல்வி அடைந்தது. அதிலும் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது.
அதை தொடர்ந்து ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மற்றும் அவரது கேப்டன்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆஸ்திரேலியாவில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா தாமாகவே விலகினார். அதனால், அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பாரா? கேப்டன் பதவியில் இருந்து விலகுவாரா? என்ற சந்தேகம் இருந்தது.
ஆனாலும், அவர் இன்னும் சில மாதங்களுக்கு கேப்டனாக தொடர விரும்புவதாக பிசிசிஐ சந்திப்பில் கூறி இருக்கிறார். இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ரோஹித் சர்மா தலைமையில் விளையாட உள்ளது.
அடுத்த கேப்டனை அடையாளம் காண்பதில் சில சிக்கல்கள் இருந்தாலும், 2025 சாம்பியன்ஸ் டிராபி முடிவில் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகளை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கையை பிசிசிஐ எடுக்கும் என கூறப்படுகிறது. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி வெல்லவில்லை என்றால் நிச்சயமாக ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்தும், அணியில் இருந்தும் பிசிசிஐ நீக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பும்ரா தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில், ஒருநாள் அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.