இந்தியா vs உலக இதர அணியுடன் போட்டி நடத்த பிசிசிஐ திட்டம்.. 100 ஆண்டு விழாவை கொண்டாட ஏற்பாடு
மும்பை: பிசிசிஐ தனது 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், இந்திய அணிக்கும் ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்ட் லெவன் அணிக்கும் இடையே ஒரு சிறப்புப் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் அண்மையில் நடைபெற்ற பிசிசிஐ-யின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், 2028 ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள நூற்றாண்டு விழாவிற்கான ஆரம்பகட்டப் பணிகளை பிசிசிஐ பொதுக்குழு தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள், 2027 டிசம்பரில் தொடங்கி 2028 முழுவதும் ஒரு வருட கால திட்டமாக நடைபெறவுள்ளது. இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாக அமையவுள்ளது.

இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை மேற்பார்வையிட ஒரு சிறப்புக் குழுவை அமைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பல்வேறு ஆலோசனைகளில் ஒன்றாக, இந்தியா மற்றும் ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்ட் லெவன் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி அமைந்திருந்தது.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்த ஆலோசனைகள் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே உள்ளன. இக்கொண்டாட்டங்களை பிசிசிஐ எவ்வாறு இறுதி செய்யவுள்ளது என்பது வரும் நாட்களில் தெரியவரும்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உலக லெவன் அணி இதுவரை சர்வதேச அளவில் மொத்தம் ஒன்பது போட்டிகளில் விளையாடியுள்ளது.
இதில் 2005 ஜனவரியில் ஆசிய லெவன் அணிக்கு எதிராக விளையாடிய ஒரு ஒருநாள் போட்டியும், 2005 அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியும் அடங்கும்.
மேலும், 2017 செப்டம்பரில் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளிலும், 2018 மே மாதத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒரு டி20 போட்டியிலும் அந்த அணி விளையாடியுள்ளது.இருப்பினும், இந்திய அணி இதுவரை ஐசிசி உலக லெவன் அணிக்கு எதிராக எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


